75 வயது கிராமத்து விஞ்ஞானியின் வியக்கவைக்கும் திறமை

0
633

சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தில் ஒரு வீட்டு மாடியில் ஒரிஜினல் விமானம் போல் செய்து வைத்திருப்பதை பொதுமக்களும் மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்வதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அதன் உரிமையாளர் அப்துல்ஹமீது.“எனக்கு நாலு மகன்கள். எல்லாரும் மட்டன், கோழி மொத்த வியாபாரம் செய்துவருகிறோம். எங்களுக்கு திருப்பத்தூர்தான் சொந்த ஊர்.
பிழைப்புக்காக இங்கே வந்தேன். ரொம்பவே கடன்பட்டேன். உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பினேன். வாழ்க்கையில் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறேன். இந்தத் தொழில்ல 35 வருஷமாக இருக்கிறேன். என் வீட்டை ஊர்ல உள்ளவங்க கோழிக்கடைக்காரவுங்க வீடுனு தான் சொல்லுவாங்க.நாலு வருஷத்துக்கு முன்னாடி வீட்டு நகைகள் கொஞ்சம் களவு போயிருச்சு. அது எனக்கு ரொம்பவே மனக்கஷ்டமாக இருந்தது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்ங்றதால என்னால தாங்கிக்கொள்ள முடியல. ரெம்ப நாள் கனவு வீட்டை சுத்தி கேமரா வைக்கணும்னு. இன்னைக்கு நான் நல்லா இருக்கேன். ஐந்து ஊர்ல மட்டன் கோழி மொத்தக்கடைகள் வைத்திருக்கிறோம். அல்லாவின் அருளால் என்னோட நாலு மகன்களும் ஒழுக்கமாக இருக்காங்க. பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறோம். ஊர்ல நாலுமாடி வீடு கட்டியிருக்கிறேன். நான் வசதியாக இருந்தாலும் என் மகன்களுக்கு ஏழைகளின் வீட்டில்தான் திருமணம் செய்திருக்கிறேன். மருமகள்கள் எல்லாம் எனக்கு மகள்களாக இருக்கிறார்கள். திடீர்னு எனக்கு இதயக் கோளாறு வந்திருச்சு. அதோட மனசுக்கு சந்தோஷம் வேணும்னு நினைச்சேன்.பொழுது சாய்ந்த நேரம் மாடியில நின்னுட்டு காத்துவாங்குறது வானத்தையும் இயற்கையையும் ரசிக்கிறதுதான் எனக்கு வேலையாக இருந்தது. அந்த நேரத்துல தான் காரைக்குடியில் வயது முதிர்ந்த பீர்பாய் அறிமுகம் கிடைத்தது. அவர் எதைப் பார்த்தாலும், சொன்னாலும் அப்படியே செய்யும் திறமை படைத்தவர். அவரிடம் சொன்னேன். கோழிக்கடைக்காரர் வீடுங்கிற பேரை மாத்தி மக்கள் என்னை ப்ளேன் காரவுங்க வீடுனு சொல்லனும். அதுமாதிரி எனக்கு எதாவது செஞ்சு கொடுங்கனு சொன்னேன். அதே மாதிரி செஞ்சு கொடுத்துட்டாரு. இன்னைக்கு என் வீட்டுக்கு நிறைய மக்கள் ப்ளேன் பார்க்க வர்றாங்க. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.என் வீட்டை சுத்தி மூணு ஊரணி இருக்கிறதுனால காத்து நல்லா சிலு சிலுனு வருது. மாடி மேல இருக்குற ப்ளேன் காத்தாடி சுத்தும்போது உண்மையிலேயே ப்ளேன் போற சவுண்ட் கேட்குது அப்படி கேட்கும்போது என் இதயம் குதூகலமாக இருக்கிறது.

கண்ணால பார்த்தாலேபோதும் அப்படியே வடிவமைக்கும் திறமை படைத்தவர் பீர்முகம்மது. 75 வயது இளைஞர். அவர் வடிவமைத்த விமானத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.”எனக்குச் சொந்த ஊர்; திருநெல்வேலி. எங்க குலத்தொழிலே ட்ரெங்கு பெட்டி செய்யுறதுதான். இந்த வேலைக்காக 1971-ம் ஆண்டு நண்பர் ஒருத்தர் மூலமாக காரைக்குடி வந்தேன். பீரோ செய்யும் தொழில் செய்தேன். பிறகு ஏ.சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின் எல்லாம் டிங்கரிங் வேலை செஞ்சேன். 11 வயசுல இந்த வேலைக்கு வந்தேன். இன்னைக்கு வரைக்கும் சுத்தியல், கட்டிங் பிளேடு இல்லாம நான் இல்லை. யாரு என்ன ஐடியா கொடுத்தாலும் சரி. இல்லாட்டி நானே கற்பனையில் எதையும் அப்படியே செஞ்சுக் கொடுப்பேன். கல்லல்ல செஞ்சு நிப்பாட்டியிருக்கிற விமானம் 35 கிலோ சுத்தமான சில்வர் தகடுல செஞ்சது. அத செய்யுறதுக்கு மூணு மாசம் ஆச்சு. ஒரிஜினல் விமானம் கூட தோற்று போய்விடும். அந்த அளவுக்கு லைட்டிங், காத்து அடிக்கும்போது அதுவாகவே திரும்பிக்கொள்ளும் வசதியோடு செய்து கொடுத்திருக்கிறேன். எனக்கு வயசாகிருச்சுனு நினைக்காதிங்க சார். நீங்க எதைச் செய்யச் சொன்னாலும் என்னால செய்துகொடுக்க முடியும். விருதுநகர்ல படிக்கிற மாணவருக்கு கண்காட்சியில் வைப்பதற்காக ராக்கெட் செஞ்சு கொடுத்திருக்கிறேன்”
அப்துல்கலாம் கண்ட கனவு கிராமத்து விஞ்ஞானிகள் இவரைப்போன்றவர்கள் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here