மானாமதுரையில் 4 நாட்களாக ஏடிஎம்.கள் முடக்கம்

0
1043

மானாமதுரையில் நான்கு நாட்களாக ஏடிஎம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலான ஏடிஎம்கள் முடங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.மானாமதுரையில் கடந்த 27ம் தேதி முதல் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம், வைகை ஆற்றில் அழகர் இறங்குதல், நேற்று முன்தினம் நிலாச்சோறு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிக்கு மானாமதுரையை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். திருவிழாவின்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியதற்காக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க முயன்றனர். 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே ஏடிஎம்கள் திறந்திருந்தன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விரல் விட்டு எண்ணும் வகையிலான ஏடிஎம் மையங்கள் மட்டுமே இயங்கின.மானாமதுரை நகரில் 15க்கும் அதிகமான ஏடிஎம்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மட்டுமே செயல்பட்டது. திங்கள்கிழமை அனைத்தும் பணம் இல்லாத காரணத்தால் மூடப்பட்டிருந்தன. இதனால் தொடர்ந்து 4 நாள்கள் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்இது குறித்து சிவக்குமார் கூறுகையில், ‘‘உள்ளூரில் நடக்கும் இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். தங்கள் தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம்மை தவிர வேறு வழியில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களாக ஏடிஎம்களில் பணம் இல்லை. பணத்தை பெற பொதுமக்கள் பரமக்குடி, சிவகங்கை செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டது. வங்கி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களின் அலட்சியப்போக்கே இவ்வளவு சிரமத்திற்கும் காரணம்’’ என்றார். இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், ‘‘27ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பணம் வைக்கப்படவில்லை என்ற தகவல் தெரியாது. ஏனென்றால் ஏடிஎம்களில் தனியார் நிறுவனங்கள் தான் பணம் வைக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் மே 1 தொழிலாளர் தின விடுமுறை என்பதால் அனைவரும் ஏடிஎம்களில் இருந்த பணத்தை சனிக்கிழமையே தேவைக்கு அதிகமாக எடுத்துள்ளனர். அதனால் அனைவருக்கும் கிடைக்காமல் போய்விட்டது. இன்று( நேற்று) ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் நேரடியாக பணத்தை பெற்று சென்றுள்ளனர்’’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here