ஒரு கிலோ விபூதி ரூ 500 – பால் தேவையில்லை… சாணமே போதும்!

0
3402

விவசாயிகள் நாட்டுமாடுகளை வளர்க்கத் தயங்குவதற்குக் காரணம், நாட்டு மாடுகளிடம் அதிகப்பால் கிடைக்காது என்பதுதான். ஆனால், ‘நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும்’ என்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத்.சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத். நகைத் தணிக்கையாளரான இவர், ‘நாட்டுமாட்டுச் சாணத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவரும் விவசாயி’ என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். தன்னுடைய பண்ணையில், மாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.“என் பையன், மருமகன் எல்லோரும் இயற்கை மேல ஆர்வம் உள்ளவங்க. ஒரு பையன் ஐ.டி கம்பெனியான ‘விப்ரோ’ல வேலை பார்க்குறாரு. இன்னொரு பையன் ‘ஹைகோர்ட் அட்வகேட்’. மருமகனும் விப்ரோலதான் இருக்காரு. இவங்க எல்லோரும் கொடுத்த ஊக்கம்தான் இந்தப்பண்ணை.எனக்குச் சின்ன வயசுல இருந்தே நாட்டுமாடுகள் மேல பிரியம். ஆனா, அதை முறையா வளர்க்க சந்தர்ப்பம் அமையல. ‘பசுமை விகடன்’ மாதிரியான பத்திரிகைகள்ல வர்ற நாட்டுமாட்டுப் பண்ணைகள், விவசாயிகள் பேட்டிகளைப் படிக்கப் படிக்க ஆர்வமா இருக்கும்.பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் பேங்க் பயிற்சி மையத்துல ஒரு தரம் நாட்டுமாடு வளர்ப்பு பத்திப் பயிற்சி கொடுத்தாங்க. அதுல நானும் கலந்து கிட்டேன். அப்போ இருந்து தொடர்ந்து அவங்களோடு தொடர்புல இருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி அந்தப் பயிற்சி மையத்தோட இயக்குநர், எனக்கு ரெண்டு பசு மாடுகள், ஒரு காளை, ஒரு கன்னுகுட்டியை வாங்கிக்கொடுத்தாரு. அதை வெச்சுதான் பண்ணையை ஆரம்பிச்சேன். இப்போ மொத்தம் 60 மாடுகள் இருக்குது. எங்கிட்ட இருக்கிற பெரும்பாலான மாடுகள் காங்கேயம் ரகம்தான்.

நான் ஆரம்பத்துல இருந்தே பால் மூலமாக வரும் வருமானத்தை எதிர்பார்க்கலை. அதனால, கன்னுகளுக்குப் பாலை முழுசா விட்டுடுவேன்.
பால் விற்பனை வேணாம்னு முடிவு பண்ணினதும், பண்ணைச் செலவை எப்படிச் சமாளிக்கிறதுன்னு காங்கேயம் காடையூர் ‘கொங்கு கோசாலா நிர்வாக இயக்குனர் ” திரு.சிவக்குமார் அவர்களிடம் கேட்டேன். அவர்தான் எனக்குப் பல ஆலோசனைகளைச் சொன்னார்.அதுல ‘நாட்டு மாட்டுச் சாணத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா, பாலைவிட அதிக வருமானம் கிடைக்கும்’னு சொன்னார்.அதுக்கப்புறம், கொங்க கோசாலை குழுவில் நடந்த பயிற்சியின் மூலமாக சாணத்தை மதிப்புக்கூட்டுற விதத்தையும், அவர்களின் விபூதி அடுப்பு மாதிரி மற்றும் நாட்டு பசு விபூதிக்கான சந்தை வாய்ப்புகளையும் பார்த்த பிறகு நானும் விபூதி தயார் பண்ணி விற்பனை செய்றேன். எனக்கும் விபூதிக்கான ஆர்டர் அதிகமா இருக்கு” என்ற சம்பத், பண்ணையைச் சுற்றிக் காட்டினார்.நுழைவுப் பகுதியில் கன்றுகளுக்கான கொட்டகை இருக்கிறது. அதில், காங்கேயம், கிர், மலைநாடு கிட்டா, வெர்ச்சூர் போன்ற இனக்கன்றுகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அதற்கு அடுத்துப் பிரதான கொட்டகை, அறுபது அடிக்கு நாற்பது அடியில் இருக்கிறது. அதில், இரண்டு பக்கங்களிலும் மாடுகள் கட்டப்பட்டிருந்தன. நடுவில் கழிவுகள் தொட்டிக்குச் செல்வது போல் சிறிய வாய்க்கால் அமைக்கப் பட்டிருக்கிறது.

“காங்கேயம், நகோரி, காங்கிரஜ், மலைநாடு கிட்டா, வெர்ச்சூர், ஓங்கோல், சாஹிவால் மாடுகள் இருக்கு.

பண்ணையைப் பார்த்துக்கிறதுக்காக ஒரு குடும்பம் தங்கியிருக்குது. மாடுகள் சாணம் போட்டவுடனே அதை எடுத்துடுவாங்க. பசு மாட்டுச் சாணத்தைத் தனியாகவும், காளைமாட்டுச் சாணத்தைத் தனியாகவும் பிரிச்சு வெச்சுடுவாங்க. பசு மாட்டுச் சாணத்துலதான் விபூதி (திருநீறு) தயாரிப்போம். காளைமாட்டுச் சாணத்தை உரத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்.மாடுகளோட சிறுநீர், வாய்க்கால் வழியா தொட்டிக்குப் போயிடும். அதுமாதிரி ரெண்டு கீழ்நிலை தொட்டிகள் இருக்கு. கழுவிவிடுற தண்ணி தனியாகவும், சிறுநீர் தனியாகவும் போற மாதிரி ‘கேட்வால்வ்’ அமைச்சிருக்கேன். அதனால, சிறுநீரைத் தனியா விற்பனை செய்ய முடியுது. ஒரு கிலோ விபூதியை 500 ரூபாய்க்கு வாங்கிக்கிறாங்க. மாசம் 75 கிலோ விபூதி விற்பனை மூலமா 37,500 ரூபாய் கிடைக்கும். ஒரு லிட்டர் சிறுநீரை 50 ரூபாய்னு, மாசம் 500 லிட்டர் வரை விற்பனை செய்றேன். அது மூலமா மாசம் 25,000 ரூபாய் கிடைக்கும். கன்னுக்குட்டிகளுக்குப் பால் தேவை இருக்கிறதால, ஒருவேளை மட்டும்தான் கறப்போம். கன்னுகுட்டிகளெல்லாம் குடிச்சது போகத் தினமும் 15 லிட்டர் அளவுக்குப் பால் கறப்போம். ஒரு லிட்டர் பால் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம்.பண்ணையிலேயே வந்து வாங்கிக்கிறாங்க. பால் விற்பனை மூலமா மாசம் 36,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்குது. விபூதி தயாரிச்சது போக மீதமுள்ள சாணத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்றோம்.

வருஷத்துக்கு மூணு தரம் காய்ஞ்ச சாணம் விக்கிறது மூலமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. மாசத்துக்குனு பார்த்தா 3,000 ரூபாய் வரும். ஆக, எல்லாம் சேர்த்து மாசம் 1,01,500 ரூபாய் வருமானமாக் கிடைக்குது.மாடுகளுக்குத் தீவனம், வேலையாள் சம்பளம்னு எல்லாச்செலவும் போக மாசம் 40,000 ரூபாய் லாபமா நிற்க்கும்” என்ற சம்பத் நிறைவாக, “அடுத்து விபூதி உற்பத்தியை அதிகப்படுத்தலாம்னு இருக்கேன். உத்தரப்பிரதேச மாநிலத்துல மாட்டுச் சிறுநீரையும் பிராசஸ் பண்ணி ‘ஹெல்த் டிரிங்க்’னு சொல்லி, லிட்டர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்றாங்க. அந்த மாதிரி செய்யலாமானு யோசிச்சிட்டுருக்கேன். அடுத்துப் பஞ்சகவ்யாவையும் தயாரிச்சு விற்பனை பண்ணலாம்னு இருக்கேன். நான் நாட்டுமாடு வளர்க்குறதை ஆத்மார்த்தமான செயலாத்தான் பார்க்குறேன். வருமானத்துக்கான தொழிலாகப் பார்க்கலை.‘தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு’னு சொல்ற மாதிரி, நாம முறையா பாதுகாத்துப் பராமரிச்சா, கோமாதா கொட்டிக் கொடுக்கும். பாலைவிட நாட்டுமாடுகளோட கழிவுகளுக்கு இன்னிக்கு அதிகக் கிராக்கி இருக்கு. சாணத்தையும் சிறுநீரையும் வெச்சே நல்ல லாபம் பார்க்க முடியும்” என்றார்.

விபூதி தயாரிப்பது எப்படி?
“பசு மாட்டுச் சாணத்தைப் பச்சையா இருக்கும்போதே வைக்கோல், குச்சிகளைக் கழிச்சு சுத்தப்படுத்தி, சாத்துக்குடிப் பழ அளவுல கையால உருட்டி, வெயில்ல ஒரு வாரம் காய வெச்சுடுவோம். ரெண்டு உருண்டைகளை எடுத்து ரெண்டையும் தட்டிப்பார்த்தா ‘சிலிங்’னு சத்தம் வந்தா நல்ல காய்ஞ்சுடுச்சுனு அர்த்தம். காய்ஞ்ச சாண உருண்டைகளை, விபூதி தயாரிக்கிற பர்னர்ல அடுக்கி நெருப்பு வெப்போம்.
ஒரு தடவைக்கு 150 கிலோ அளவுக்கு உருண்டைகளை வெக்கலாம். அடுப்புல ஒரு வாரம் வெந்ததும், அடுப்பை அணைச்சுக் உள்ளேயே மூணு நாள் குளிர வைப்போம். பிறகு வெளியே எடுப்போம். 150 கிலோ சாண உருண்டைகள் மூலமா 25 கிலோ விபூதி கிடைக்கும். அதைச் சாக்குல கட்டி விற்பனைக்கு அனுப்பிடுவோம். இப்போதைக்கு மாசம் 75 கிலோ வரை விபூதி தயாரிக்குறேன். விபூதி தயாரான மறுநாளே விற்பனையாகிடும். அந்தளவுக்குக் கிராக்கி இருக்கு” என்கிறார் சம்பத்.

தொடர்புக்கு:

சம்பத்: 73389 39369.

காங்கேயம், காடையூர் கொங்க கோசாலை சிவக்குமார்: 075022 07000

குறிப்பு :

அவ்வப்போது கொங்க கோசாலையில் பஞ்சகாவ்ய பொருட்கள் மதிப்புகூட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட எண்ணற்றோர் வெட்டுக்கு செல்லும் நாட்டுமாடுகளை மீட்டு அதன் மூலம் விபூதி தயாரிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். விபூதி அடுப்புகளை கொங்கு கோசாலை குழுவினரே அமைத்தும் விபூதியை சந்தைபடுத்தியும் தருகிறார்கள்.

கட்டுரையாளர் ஆர்.குமரேசன்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

நன்றி : விகடன் குழுமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here