சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது.இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே உள்ளது. இப்படி வரலாற்று படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இயக்குனர் சுசி கணேசன் வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க முடிவு செய்தார். இதில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதாநாயகியை இயக்குனர் சுசி கணேசன் தேடி வந்த நிலையில் நடிகை நயன்தாராவை வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியார் 17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில் ஆட்சி புரிந்தவர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை. இவரின் தைரியத்தையும், துணிச்சலையும் ஈடு கட்டும் வகையில் நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.நடிகை நயன்தாரா மாயா, டோரா, ஐரா போன்ற படங்களில் தொடங்கி மூக்குத்தி அம்மன் வரை கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் மற்ற கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் இயக்குனர் சுசி கணேசன் ஃபைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டு பயலே மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.