யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையே தண்ணீர் தேக்க பள்ளம் நீரை திருடும் மரத்திற்கு நீர் வார்ப்பதா?

0
1384

மானாமதுரையில் யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையே தண்ணீர் தேக்குவதற்காக பள்ளம் வெட்டியுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மானாமதுரை அருகே செய்களத்தூர், நத்தபுரக்கி, குருந்தங்குளம், மஞ்சிக்குளம்,  கண்மாய்ப்பட்டி, சிப்பிபிலியேந்தல் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களிலும், சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட உருளி, குடஞ்சாடி, காயாங்குளம், மாடக்கோட்டை, சூரக்குளம் உள்ளிட்ட 17 கிராமங்களை சுற்றிலும் வனத்துறை வனத்தோட்ட கழகத்தின் மூலம் யூகலிப்டஸ் எனும் தைல மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சுமார் 22 ஆயிரம் எக்டேரில் கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர். இந்த மரங்களால் நிலத்தடி நீர் காணாமல் போய்விடும். எனவே வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவற்றை காக்கும் நடவடிக்கையிலேயே வனத்துறை வனத்தோட்ட கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோடை மழை நீரை கண்மாய்க்கு செல்லாமல் தடுத்து நிறுத்தும் விதமாக, யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையே பள்ளங்களை தோண்டியுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமுருகன் கூறுகையில், ‘‘மானாமதுரை அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 62 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில் தைல மரக்கன்றுகளை நடுவதை எதிர்த்தோம். இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சமரச கூட்டத்தில் வனத்தோட்ட கழக்கத்தினர் தைல மரங்கள் நடுவதை நிறுத்தி வைப்பதாக வருவாய்த்துறையினர் முன் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர். ஆனால் முடிவை மீறி மரங்களுக்கு இடையே 2 அடிக்கு பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் கண்மாய்களுக்கு மழைநீர் செல்வது தடுக்கப்படுகிறது. குறிப்பாக வனவர் கணேசனின் இச்செயல் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சமரச கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறிச்செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here