சிவகங்கை அருகே மேலச்சாலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை ஒன்றியம் மேலச்சாலூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளி திறக்கப்பட்ட ஜூன் 1 அன்று முதல் நாளே, முதல் வகுப்பிற்கு 67 மாணவர்கள் சேர்ந்தனர். ஏற்கனவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர் எண்ணிக்கை 289 இருந்த நிலையில் தற்போது 313 ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருக்கும் சில பள்ளிகளில் மேலச்சாலூர் பள்ளியும் ஒன்று. சிவகங்கை ஒன்றிய அளவில் இப்பள்ளியே மாணவர் எண்ணிக்கையில் முதலிடமும், மாவட்ட இளவில் இரண்டாமிடமும் வகிக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்தே வருவதில். இப்பள்ளி முன்னுதாரணமாக திகழ்கிறது.
இதுகுறித்து தலைமையாசிரியை கலைச்செல்வி கூறியதாவது: ‘‘பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளில் இருந்து மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். மாணவர் எண்ணிக்கை உயர்வுக்கு ஆசிரியர்களின் அயராத பணி, பெற்றோர் ஒத்துழைப்பு உள்ளிட்டவையே காரணம். பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே 60க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை புதிய நம்பிக்கையை அளித்தது. எங்கள் பள்ளி தொடர்ந்து மாவட்ட அளவில் மாணவர் எண்ணிக்கையில் முன்னுதாரணமாக திகழும்’’ என்றார்.