பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி துவக்கம்

0
1165

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை கிராமத்திற்குட்பட்ட வைகை ஆற்றில் மணல் அள்ளும் பணி துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட இடைக்காட்டூர், ராஜகம்பீரம் ஆகிய வைகையாற்று பகுதிகளில் உள்ள 79 குடிநீர் திட்டங்களிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ராஜகம்பீரம் அருகேயுள்ள வைகை ஆற்றிலிருந்து மானாமதுரை நகருக்கு விநியோகமாகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டதால் மானாமதுரைக்கு விநியோகம் ஆகிற குடிநீர்வளம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக மானாமதுரை நகர் மக்களுக்கு குடிதண்ணீர் விநியோக நேரம் குறைந்துவிட்டது.இதே போன்றுதான் கடலாடி கூட்டுக்குடிநீர் திட்டமும் நீர் ஆதாரம் குறைந்திருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் வற்றிவரும் குடிநீர் உறைகிணறு இருக்கிற இடத்தின் அருகே மண் அள்ள அரசு முடிவு செய்து தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர், வாகுடி பகுதிகளில் மணல் குவாரி அமைக்கும்பணி துவங்கியது. அரசு அனுமதி வழங்கினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்வளம் கடுமையாக பாதிக்கபடும் என விவசாயிகள்,பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், அனைத்துகட்சியினர் உள்ளிட்டோர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் தெ.புதுக்கோட்டை வைகை ஆற்றில் நேற்று அதிகாலை இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், கனரக லாரிகள் வரவழைக்கப்பட்டு மணல் அள்ளம் பணி துவங்கியுள்ளது.

தெ.புதுக்கோட்டை அருகே வைகை ஆற்றில் பி.ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. இத் திட்டத்தில் தெ.புதுக்கோட்டை, சின்னபுதுக்கோட்டை, முட்டைக்குறிச்சி, கோச்சடை, கணையனேந்தல், ஆலம்பச்சேரி, கோவானூர், மேலநெட்டூரின் ஒரு பகுதி, ஆலங்குளம், நல்லாண்டிபுரம், தெற்குசந்தனூர், எஸ்.காரைக்குடி, வடக்கு சந்தனூர், அரியனூர், வண்ணான்ணோடை, செய்யாங்கோட்டை, புலவனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தெ.புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர்கூட நிரம்புவதில்லை. பிராமணக்குறிச்சியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பவில்லை.30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட கீழப்பெருங்கரை மேல்நிலைத்தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இப்பகுதியில் மணல் அள்ளினால் நீர்வளம்  பாதிப்படையும் என்று எதிர்ப்பு தெரிவித்தும் மணல் அள்ள டெண்டர் விட்டு அள்ளபட்டு வருகிறது. ஏற்கனவே, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் சூடியூர். மானாமதுரையிலிருந்து 15 வது கி.மீ தூரத்தில் சூடியூர் உள்ளது. இதன் அருகே வைகை ஆற்றுக்குள் 20 அடி அகல சாலை அமைத்து பகுதியில் வைகையை சுரண்டு கொள்ளையடித்துவிட்டனர். இங்கேயிருந்து 3 கி.மீ தூரத்தில் தெ.புதுக்கோட்டை எல்லையில் வைகையில் மணல் அள்ள சூடியருக்கு நேராக ஆற்றின் மையப்பகுதியில் தெ.புதுக்கோட்டை எல்லை வரை ரோடு போட்டுள்ளனர். சுற்றுச்சூழல் விதிகளை மீறி ஆற்றுக்குள் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மணல் குவாரி இங்கு நடந்தால் நிலத்தடி நீர் குறைந்து கிணறுகள் வறண்டுபோவதுடன் விவசாயமும் பொய்த்துவிடும். எனவே, அரசு மணல்குவாரியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here