அணு உலைகள், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் காஸ் என தமிழக மக்களை பயமுறுத்தும் மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம். அந்தவகையில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் சில கிராமங்களில் ராட்சத இயந்திரங்களால் பூமியில் துளையிட்டதைத் தொடர்ந்து அங்கு மீத்தேன் எடுக்கப்போவதாக தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள், சாலை மறியல் நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளர்.சிவகங்கை மாவட்டத்தில் வி.மலம்பட்டி மற்றும் மேலூர் தொகுதிக்கு உட்பட்ட அ.வல்லாளபட்டி, தெற்குத் தெரு, நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, கத்தப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மீத்தேன் திட்டம் கொண்டுவரப்போகிறார்கள் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு பரவியது. இதுகுறித்து வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காஞ்சி செல்வம், “சில நாள்களுக்கு முன்பு ராட்சத இயந்திரங்களுடன் இங்கு வந்த சிலர், பூமியில் துளையிட்டனர். நாங்கள் கேட்டதற்கு, ‘நீர் மட்டத்தின் அளவு, மண்ணின் தன்மையை அறிவதற்காகத் துளையிடுகிறோம்’ என்றனர். பின்பு அந்த இடத்தை கான்க்ரீட் போட்டு மூடிவிட்டனர். நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோதும் முறையான பதில் இல்லை. அச்சமடைந்த எங்கள் ஊர் மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் நேரில்வந்து, ‘இது மீத்தேன் திட்டம் இல்லை. என்ன சோதனை என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்’ என்றனர். என்ன சோதனை என்று அதிகாரிகளுக்கே தெரியாமல் இருப்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது” என்றார்.
அ.ம.மு.க சார்பில், ‘கிராமங்களில் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவர, விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் வாரியம் மூலம் ஆயிரம் அடிக்குப் பூமிக்குள் மண் சோதனை செய்யப்படுகிறது. இதைக் கண்டிக்கிறோம்’ என்று மேலூர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள், ‘‘மேலூர் பகுதியில் மீத்தேன் இருப்பதாகவும், அதை உறுதிசெய்ய மத்திய அரசு மண் சோதனை செய்துவருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதிகாரிகளிடம் கேட்டால், ‘தண்ணீரைச் சோதனை செய்கிறோம். வேறு ஒன்றும் இல்லை’ என்கிறார்கள். விவசாயத்தை அழிக்கும் மீத்தேன் திட்டத்தை இங்கு கொண்டுவரவிட மாட்டோம்’’ என்றனர்.
கிரானைட் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மேலூர் வழக்கறிஞர் ஸ்டாலின் கூறுகையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டாவை அழிக்கத் திட்டமிடும் மத்திய அரசு, தற்போது பெரியார் பாசனப் பரப்பையும் மீத்தேன் திட்டத்தால் அழிக்கப் பார்க்கிறது. மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் கிரானைட் பிடியில் சிக்கி, தற்போதுதான் அதிலிருந்து மீண்டுள்ளன. மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு உடனடியாக விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்றார்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கேட்டதற்கு, “இங்கு மீத்தேன் திட்டம் வருவதாகத் தகவல் வரவில்லை’’ என்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் கேட்டபோது, “இந்தத் தகவல் உண்மை அல்ல. மீத்தேன் திட்டம் வரவிருப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பற்றி விசாரணை நடத்திவிட்டுத் தகவல் அளிக்கிறேன்’’ என்றார்.