பாரம்பரியம் பேசும் ஆத்தங்குடி டைல்

0
736

செட்டிநாடு என்றால் உடனே ஞாபகம் வருவது உணவும் அங்கு அமைந்துள்ள வீடுகளும்தான். ஆளை அசத்தும் அமர்க்களமான செட்டிநாட்டு வீடுகளைப் போன்றே பிரசித்தி பெற்றது செட்டி நாட்டில் தயாராகும் ஆத்தங்குடி டைல்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் ஆத்தங்குடி. இங்கே தான் பாரம்பரியமிக்க ஆத்தங்குடி டைலை உருவாக்குகிறார்கள். அதாவது இன்னும் முழுக்க இயந்திரமயமாகவில்லை. மனிதர்களின் கைகளால் உருவாக்கப்படுவதால்தான் அது கலை நயத்துடன் இருக்கிறது. இன்றும் பலரும் ஆத்தங்குடி டைல்ஸ்களை வீடுகளில் பதிக்கிறார்கள். அப்படிப் பதிக்கும்போது வீடுகளுக்குப் பிரேத்யேக அழகு வந்துவிடுகிறது என்பது அவர்களது அபிப்ராயம்.  

ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கும் வழிமுறைகள் கலைநயம் கொண்டவை. ஏனெனில் இதைத் தயாரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்புதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அழகான வண்ண வண்ணப் பூக்களால் ஆன இந்த ஆத்தங்குடி டைல்ஸ் மீது கால் பதிக்கக்கூட மனது தயங்கும். அந்த அளவு சவுந்தர்யம் மிளிரும். இந்த டைல்ஸ் உள்ளூரிலேயே கிடைக்கும் மண், சிமெண்ட், பேபி ஜெல்லி, சில செயற்கை ஆக்ஸைடுகள் ஆகியவற்றைக் கலந்து செய்யப்படுகிறது. இதன் தயாரிப்புப் பணி மிகவும் கடுமையான பல நிலைகளைக் கொண்டது.முதல் நிலையில் ஆத்தங்குடி டைலுக்கான அலங்கார வடிவ வார்ப்பைக் கண்ணாடிமீது வைப்பார்கள். அந்த அலங்கார வார்ப்பு பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஒரு பூ வடிவ வார்ப்பு என்றால் பூவின் இதழ்களுக்கான பிரிவுகள் தனித் தனியே பிரிந்து காணப்படும். ஒவ்வொரு பிரிவையும் சிறிய தடுப்பு பிரிக்கும். இதனால் அந்தப் பிரிவுக்குள் வண்ணக் கலவையை ஊற்றும்போது அவை ஒன்று சேர்ந்துவிடாமல் தனித்தனியே இருந்து பூ வடிவை உண்டாக்க வழிவகை செய்யும். செயற்கையாக அல்லது இயற்கையாக உண்டாக்கிய வண்ணக் கலவையை அந்த வார்ப்பின் பிரிவுகளில் ஊற்றுவார்கள்.

டைலின் முன்பக்கத்துக்குத் தேவையான வேலைப்பாடு முடிந்த பின்னர் வார்ப்பின் பின்பக்கத்தில் உலர்ந்த மணல், சிமெண்ட் கொண்ட கலவையை இட்டு நிரப்புவார்கள். பின்னர் அதன் மீது ஈரமான மணல், சிமெண்ட் கலவையை வைத்துப் பூசுவார்கள். சமதளக் கரண்டி உதவியுடன் பின்பக்கத்தின் மேற்பரப்பை சொரசொரப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றி, ஈரமான கலவை உலர் கலவையுடன் நன்கு இணையும்படி அழுத்தம் கொடுப்பார்கள். இந்த வேலைகள் அனைத்தையும் முடித்த உடன் டைலை வார்ப்பிலிருந்து எடுத்து உலர வைப்பார்கள். தேவையான அளவு உலர்ந்த பின்னர் அந்த டைலைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீரில் போட்டு பதப்படுத்துவார்கள். இந்தப் பதப்படுத்துதல் நிறைவேறிய பிறகு டைல்கள் பதிப்புக்கு உகந்ததாக தயாராகிவிடும்

மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும்.நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம்.ஆனால் முன்பு போல் இப்போது அதிகமான அளவில் ஆத்தங்குடி டைல் பயன்படுத்தப்படுவது இல்லை.நவீனம் நவீனம் என்று கூறி பாரம்பரிய ஆத்தங்குடி டைலுக்குப் பாராமுகம் காட்டாமல் மீண்டும் அவற்றை முன்புபோல் பயன்படுத்தினால் பாரம்பரியமும் பண்பாடும் செழிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here