“பட்டமளிப்பு விழா கவர்னர் வருகைக்கு எவ்வளவு செலவு?’’ – ஆர்.டி.ஐ.அம்பலம்

0
1163

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்து போனதற்கு ஆன செலவு 18 லட்சம் ரூபாய் எனத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ – மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தினார். அதற்காக, பல்கலைக்கழகம் செய்த செலவு எவ்வளவு என்று காரைக்குடியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் திருஞானம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார். “அதில் குறிப்பிட்டிருக்கும் செலவுகளைப் பார்த்தபோது எனக்குத் தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது” என்று சொல்லும் அவர், “ஒரு பல்கலைக்கழத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகம் செய்யும் செலவு சுமார் 18 லட்சம் ரூபாய். ஒரு கூலித் தொழிலாளி தன் ரத்தத்தைச் சிந்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடிய இந்தப் பணத்தில், இதுபோன்ற பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது” என்றார், மிகத் தெளிவாக.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். “2017 – 2018-ம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவுக்கு மொத்தம் ஆன செலவு 17 லட்சத்து 74 ஆயிரத்து 505 ரூபாய் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் தந்திருக்கிறார்கள். மதுரை பாண்டியன் நட்சத்திர விடுதியில் ஆரம்பித்து காரைக்குடி மல்லி ஹோட்டல் வரவேற்பு வரை என நீளும் இந்தப் பட்டியலில் எல்.ஈ.டி. டி.வி. வாடகைக்கு எடுத்தது, வி.ஐ.பி-க்கள் தங்கியது வரை விவரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மட்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவுக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். நம் நாட்டில் மன்னர்கள் இல்லையென்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் கவர்னர்கள் மன்னர்களைப்போல் ஆடம்பரமாக இருக்கிறார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும். கவர்னர் என்பவர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எளிமையானவராக இருக்கவேண்டும்.

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதைப் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்த வேண்டும். பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வரும்போது, தங்கக்காசு கொடுத்து வரவேற்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அந்தத் தங்கக்காசை எந்தக் கணக்கில் பல்கலைக்கழகம் எழுதியிருக்கிறது என்பது திரைமறைவாக இருக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராகப் பதவியேற்றபோது ஆளுநர் மாளிகையில் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவர் அறிவித்ததற்கும் தற்போது நடக்கும் செலவுகளுக்கும் சம்பந்தமே இல்லை. பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் வருகிறார் என்றால், ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. அவரின் பாதுகாப்புக்காகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் எல்லாம் தற்காலிகச் சாலைகள் அமைப்பது, சாலைகளைச் சுத்தம் செய்வது என அந்தந்தத் துறையிலிருந்து செலவு செய்வது தனிக்கணக்காக இருக்கிறது. இவர்களைத் தாண்டி நகராட்சி நிர்வாகம், சுகாதாரம் என்கிற பெயரில் தனி பில் போடுகிறார்கள். ஆக, கவர்னர் பட்டமளிப்பு விழாவுக்கு வந்து செல்கிறார் என்றால், பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் சூறையாட வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் நவம்பர் 1-ம் தேதி வருகை தர இருக்கிறார். இதற்கு எத்தனை லட்சம் ரூபாயைச் செலவு செய்ய காத்திருக்கிறதோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார், சற்றே வேதனையோடு.

நன்றி விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here