படி ரூ.200க்கு ஈசல் விற்பனை; பொரித்து சாப்பிட சேகரிப்பு

0
1359

புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்களை பிடிப்பதில், கல்லல் பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மழை காலத்தில், இரவில் தெருவிளக்கை மொய்க்கும் பூச்சியினங்களில், ‘ஈசல்’ முக்கியமானது. பங்குனி, சித்திரையில் இதன் உற்பத்தி தொடங்குகிறது. ராணி கரையான் இடும் முட்டை, ஈசலாக வளர்ச்சி பெறுகிறது.

மழைக்காலம் :

புற்றிலிருக்கும் தாவர வகைகளை உட்கொண்டு, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில், மழை காலங்களில், இரவு நேரங்களிலும், சூரிய உதய நேரத்திலும், புற்றை விட்டு வெளியேறுகிறது. நான்கு இறக்கைகள் இருந்தாலும், காற்றை எதிர்கொள்ள முடியாத உயிரினம்.ஈசலுக்கு உணவுக் குடல் இன்றி, வயிறு மட்டுமே உள்ளது. புரதச்சத்து நிறைந்தது என்பதால், சிவகங்கை மாவட்டத்தின் கல்லல் மற்றும் சாக்கோட்டையின் பல்வேறு பகுதியில், இதை உணவாக உட்கொள்கின்றனர். கல்லலைச் சேர்ந்த, லட்சுமி என்ற பெண் கூறியதாவது:வயல் வெளி, கண்மாய் ஓரம், வரத்து கால்வாய் ஓரங்களில், ஈசல் புற்று இருக்கும். மழை துாறல் விழும் நேரங்களில், இவை வெளிவரும்.

தின்பண்டம் :

இரவு நேரத்தில், புற்றின் அருகில் விளக்கை வைத்து, ஒரு பாத்திரத்தை வைத்தால் அதில் ஈசல் விழும். பகல் நேரங்களில், புற்றை தோண்டும் போது வெளிவரும் ஈசலை, சல்லடை மூலம் பிடிக்கலாம். மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்பதால், ஒரு படி, 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை பொரித்து, அதனுடன், அரிசி பொரி, வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். முன்பு மழை நேரங்களில், காலை நேரங்களில், சிறுவர்களுக்கு இதை தின்பண்டமாக கொடுத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here