குடிநீர் தட்டுப்பாடு அபாயம் காலி குடத்துடன் அலைய போகிறோம்!

0
727
வறண்டு காணப்படும் சிவகங்கை தெப்பக்குளம்!

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் வறண்டுவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 968 கண்மாய்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் குளம் மற்றும் கண்மாய் நீரே பயன்படுத்தப்படும்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு 706.5 மி.மீ மழை பதிவானது. 2017ம் ஆண்டில் 976.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு சராசரியைவிட 72 மி.மீ கூடுதலாக மழை பெய்தது. இருப்பினும் கடும் வறட்சி, வெயிலால் இருந்த நீரும் விரைவாகவே வற்றியது. இதனால் தற்போது பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் முழுமையாக வறண்டு காணப்படுகின்றன.சில நீர்நிலைகளில் மட்டுமே சிறிதளவு நீர் காணப்படுகிறது. இந்த நீரும் இன்னும் சில வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய் கூட அமைக்கின்றனர். ஆனால் இந்த நீரை யாரும் குடிநீக்க முடியாது. நேரடியாக இந்த நீரை குடித்தால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு குளத்து நீரே பராவாயில்லை என்ற நிலையிலேயே அதை அருந்தி வருகின்றனர். இதனால் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் என்ற நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுத்திகரிப்பு உபகரணம் அமைக்க வேண்டும்:

கிராமமக்கள் கூறுகையில், ‘‘உள்ளாட்சி சார்பில் அமைக்கப்படும் ஆழ்குழாய் நீர் உப்பு அல்லது உவர்ப்பாக இருப்பதால் குடிநீராக பயன்படுத்த முடியாது.

இந்த நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடித்தால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதன் காரணமாக யாரும் இந்த நீரை குடிப்பது இல்லை. எனவே ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்களும் அமைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் சில பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சியையும் இணைக்க வேண்டும். ஆண்டுதோறும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இம்மாவட்டத்திற்கென புதிய குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும் என்றனர்.

நன்றி: தினகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here