திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப திருவிழா – விளக்கின் வடிவில் வீடுதேடி வரும் பெருமாள்!

0
5233

மாசி மாதம் வந்துவிட்டால் பல க்ஷேத்திரங்களில் பிரம்மோற்சவங்களும் திருவிழாக்களும் களைகட்டிவிடும். அப்படி விழா கோலாகலம் களைகட்டும் வைணவத் தலங் களுள் குறிப்பிடத் தக்கது, திருக்கோஷ்டியூர் என வழங்கப்பெறும் திருக்கோட்டியூர்.  108 திவ்யதேசங்களுள் ஒன்றான இத்தலத்தில், தெப்பமும் திருவிழாவுமாக நடைபெறும் பிரம்மோற்சவத்தைத் தரிசிக்க, சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்! விழாவையொட்டிய விளக்குப் பிரார்த்தனையும் இத்தலத்தின் தனிச் சிறப்பம்சமாகத் திகழ்கிறது!

இத்தலத்தின் பிரம்மோற்சவம் குறித்து விரிவாகப் பேசினார் ஆலயத்தின் ஸ்தானிகர் வெங்கடாத்ரி.‘‘ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமி மிச்சத்தில் (திதி முடிவுறும் காலம்) தெப்போற்சவம் நடைபெறும். கொடியேற்றி, காப்பு கட்டி 10 நாள் திருவிழா மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு பிப்ரவரி 21-ல் (மாசி 9) தொடங்கி, மார்ச் 3-ம் தேதி, தெப்பத்துக்கு மறுநாள் தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது திருவிழா. தெப்பத்தின்போது, மூன்று நாள்களும் உற்சவர் சௌமிய நாராயணர் அலங்காரத் திருக்கோலத் தில் தெப்பக்குளத்தருகே எழுந்தருள்வார். அதிலும் குறிப்பாக 9-ம் திருநாள் அன்று, `வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன்’ திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளுவது கொள்ளை அழகு!இந்த மாதம் மட்டுமல்ல; வருடத்தில் மூன்று முறை பிரம்மோற்சவம் நடைபெறும் தலம் இது. ஸ்ரீசௌம்ய நாராயண பெருமாள் இங்கே அவதரித்த சித்திரை மாதம் வரும் சித்திரை நட்சத்திர தினத்தில், பெருமாளுக்காக நடைபெறுவது ஆதி பிரம்மோற்சவம். அடுத்து, ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீஆண்டாளுக்காக அவருடைய திருநட்சத் திரத்தில் நடை பெறுவது ஆடி பிரம்மோற்சவம். மூன்றாவ தாக மாசி மகத்தை ஒட்டி வரும் மாசி பௌர்ணமி மிச்சத்தில் பக்தர்களுக்காக நடைபெறுவது மாசி பிரம்மோற்சவம் ஆகும்.‘பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம்தானே?’ என்று பலருக்கும் கேள்வி எழலாம். இந்திரனால் பூஜிக்கப்பட்ட இந்த பெருமாள், கதம்ப மகரிஷிக்காக பூலோகத்தில் அருள்பாலிக்க வந்தவர். அவர் இந்தத் தலத்தில் எழுந்தருளிய திருநட்சத்திரம் சித்திரை. அதனால்தான் சித்திரை மாதம் ஆதி பிரம்மோற்சவம் நடக்கிறது’’ என்றார் வெங்கடாத்ரி.

திருக்கோட்டியூரில் மாசி மகம் என்றாலே ‘விளக் கெடுக்கும் வேண்டுதல்’தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகவும் பிரபலம். தெப்போற்சவ தருணத்தில், தெப்பக்குளத்தைச் சுற்றிலும் அகல் விளக்குகளில் தீபங்கள் சுடர்விட்டுப் பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். குளத்தைச் சுற்றி எரியும் விளக்குகளில் ஏதேனும் இரு விளக்குகளை, அவை எரிந்து முடிந்தவுடன், பயபக்தியுடன் எடுத்து, தூய வெள்ளைத் துணியில் சுற்றி முடிந்து, ஒரு டப்பாவில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.இங்ஙனம், ஏதேனும் ஒரு பிரார்த்தனையைப் பெருமா ளிடம் சமர்ப்பித்து விளக்குகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்கள், அந்தப் பிரார்த்தனை நிறைவேறி யதும், மறு வருடம் தெப்போற்சவத்துக்கு வந்து, அந்த இரு விளக்குகளுடன் இன்னும் பல விளக்குகளைச் சேர்த்து 5, 7, 11, 21 என்ற எண்ணிக்கையில் விளக்கேற்றி வைக்கின்றனர். வித்தியாசமான இந்தப் பிரார்த்தனை ஏன் ஏற்பட்டது, இதன் தாத்பர்யம் என்ன என்று வெங்கடாத்ரியிடம் கேட்டோம்.‘‘எல்லா ஊரிலும் திருக்கோயிலில் விளக்கை ஏற்றிவிட்டுத்தான் செல்வார்கள். இங்கே மட்டும்தான், ஏற்றிய விளக்கை மலையேற்றிவிட்டு எடுத்துச் செல்ல முடியும். இது எப்போது தொடங்கியது எனத் தெரிய வில்லை. ஆனால், ஆண்டாண்டு காலமாக, தொடர்ந்து வருகிறது. அந்தக் காலத்தில் புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொள்ள வசதியில்லை.அதனால், அந்தப் பெருமாளையே தீப சொரூபமாக எண்ணி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். அதனால்தான், எடுத்துச் செல்லும் விளக்குகளை பூஜை அறையில் வைக்க வேண்டும். வேண்டிய  காரியம் நிறைவேறும் வரை, அந்த விளக்குகளையே பெருமாளாகப் பாவித்து, பூஜிக்க வேண்டும்.

பிரார்த்தனை பலித்த பிறகு, அந்த விளக்குகளை மீண்டும் திருக்கோட்டியூருக்கு எடுத்து வந்து, அதனுடன் இன்னும் சில விளக்குகளைச் சேர்த்து தெப்பக்குளத்தின் அருகில் ஏற்றி வைக்கவேண்டும்.இந்தப் பிரார்த்தனையைத் தெப்போற்சவ காலத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வருடம் 365 நாள்களும் செய்யலாம்.திருவிழாவின்போது, தெப்பக்குளத்தின் அருகே விளக்குகளை எடுத்துச்செல்லலாம். அதேபோல், வேண்டுதலை நிறைவேற்ற கொண்டுவரும் விளக்குகளை, அங்கேயே ஏற்றியும் வைக்கலாம். மாசி மகம் சமயத்தில் வர முடியாதவர்கள், சாதாரண நாள்களில் விளக்கெடுத்துச் செல்ல விரும்பினால், கோயிலில் பட்டாச்சார்யரிடம் சொல்ல  வேண்டும். பெருமாளுடைய மூலஸ்தானத்திலேயே அர்ச்சனை செய்துகொண்டு, விளக்குகளை எடுத்துச் செல்லலாம். அதேபோல், மீண்டும் விளக்கு ஏற்றி வைக்க நினைப்பவர்கள், சாதாரண நாள்களில் வந்தால் கோயிலிலேயே சந்நிதியில் கொடுக்கலாம்.வசதியுள்ள சிலர் தங்கள் பிரார்த்தனையைப் பெருமாள் நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில், வெள்ளி விளக்கு, தங்க விளக்குகளைக்கூட வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பதுண்டு.இந்தப் பிரார்த்தனையின் மகிமையைக் கேள்விப் பட்டு, இப்போது விளக்கு எடுக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கல்யாணம், குழந்தைப்பேறு, சொந்த வீடு, நிரந்தர வேலை, பணி உயர்வு, மேல்படிப்பு, வெளிநாட்டுக்குச் செல்லுதல், உடல் ஆரோக்கியம் என்று பல்வேறு கோரிக்கைகளுக்காக இங்கே வந்து பக்தர்கள் விளக்குகளை எடுத்துச் செல்கிறார்கள்.

பெருமாளின் கருணையால், அந்தப் பிரார்த்தனைகள் எல்லாமே ஒரு வருடத்துக்குள் நிறைவேறிவிடுகின்றன! எல்லாம் இந்த சௌமிய நாராயணன் மகிமை!’’ என்று உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார் வெங்கடாத்ரி.வருடா வருடம் பெருமாளைத் தரிசிக்கவும், விளக்கு எடுக்கவும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. காப்புக் கட்டியதிலிருந்து தீர்த்தவாரி வரை அந்த 11 நாள்களில் சுமார் 10 லட்சம் பேர் வந்து தரிசித்துச் செல்வார்கள் என்று சொல்லப்படு கிறது. இந்த வருடம், அந்த 10 லட்சத்தில் ஒருவராக நாமும் அவரை சேவிப்பதற்கு அந்த சௌமிய நாராயணப் பெருமாள் அருள்புரிய வேண்டுவோம்!தற்போது, திருக்கோட்டியூர் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷணத்துக்காக தங்க விமான திருப்பணி நடை பெற்று வருகிறது. அதற்கு நன்கொடை அளிக்க விரும்பு பவர்கள், திருக்கோயில் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பை நல்கி, பெருமாளின் திருவருளைப் பெறலாம்.

‘விளக்கு எடுத்து வந்தேன்; வீடு கட்டினேன்!’

திருக்கோஷ்டியூரில் மாசி தெப்போற்சவ காலத்தில் விளக்கு எடுத்துச் சென்று, பிரார்த்தனை பலித்தவர்களில் மதுரையைச் சேர்ந்த சகுந்தலா சுப்ரமணியனும் ஒருவர்.  ‘‘சொந்த வீடு வேணும்கிறது என்னுடைய நீண்ட நாள் கனவு. நானும் என்னென்னவோ முயற்சி பண்ணி, எல்லாவிதமான பிரார்த்தனைகளையும் பண்ணிட்டிருந்தேன். அப்போதான், நாங்க குடியிருக்கிற வீட்டுக்குச் சொந்தக்காரப் பொண்ணு என்னிடம், ‘‘திருக்கோஷ்டியூருக்கு மாசி மகத்தின்போது போய், வீடு கட்டணும்னு வேண்டிகிட்டு விளக்கு எடுத்துக்கிட்டு வாங்க… உடனே நிறைவேறும். நாங்க வேண்டிகிட்டு, விளக்கு எடுத்து வந்த பிறகுதான் இந்த வீடு கட்டினோம்’’னு சொல்லுச்சு.அந்தப் பிரார்த்தனையைப் பற்றி விரிவாகக் கேட்டுக்கிட்டு, போன வருஷம் மாசி மாதம் திருக்கோஷ்டியூர் போய், தெப்பக்குளக்கரையில் ஏற்றி வச்சிருந்த விளக்குகளில் ரெண்டை எடுத்தேன். பெருமாளிடம் என் வேண்டுகோளை மனமுருகி சமர்ப்பித்தப் பிறகு, விளக்குகளை வீட்டுக்குக் கொண்டுவந்து பூஜை அலமாரியில் பத்திரமாக வச்சேன். அதுக்கப்புறம் நடந்ததைச் சொன்னா ஆச்சர்யப்படுவீங்க… திடீர்னு, மதுரை அவுட்டர்ல, க்ரூப் ஹவுஸிங்ல நாங்க எதிர்பார்க்கும் விலையில் வீடு கட்டித் தர்றதா விளம்பரத்தைப் பார்த்து, விசாரிச்சோம். அதுக்கப்புறம் எல்லாமே மளமளன்னு நடந்துச்சு. லோன் போட்டு, வீடு கட்ட ஆரம்பிச்சாச்சு. இதோ இன்னும் ரெண்டு, மூணு மாசத்தில் எங்க சொந்த வீடு ரெடியாயிடும்!வீடு வேலை நல்லபடியா முடிஞ்சதும், திருக்கோஷ்டியூருக்குப் போய் அந்த விளக்குகளை ஏற்றி வச்சிட்டு வரணும்!’’ என்று பக்திபூர்வமாகத் தன் அனுபவத்தை விவரித்தார் சகுந்தலா.

திருக்கோட்டியூர் மகிமைகள்..! 

கூத்தாடியபடியும், நின்றும், இருந்தும், கிடந்துமாகிய நான்கு திருக்கோலங்களில் பெருமாள் அருளும் தலம் இது.நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் முதல் பாசுரத்தின் முதல் பாடலே திருக்கோட்டியூரைப் பற்றியதுதான். ‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்’ என்று பெரியாழ்வாரால் பாடப்பட்டது. பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர் திருக்கோட்டியூர் பெருமாள்.திருப்பதி பெருமாளின் `தான’ ஹஸ்தம், பொன், பொருளை தானமாக வாங்கிக்கொண்டு, அருளைக் கொடுக்கிறது. கள்ளழகரின் தான ஹஸ்தம், புத்தி, தீரம், விவேகம் ஆகியவற்றை தானமாக வாங்கிக்கொள்கிறது. திருக்கோட்டியூர் பெருமாளின் தான ஹஸ்தம், பக்தர்களின் துயரங்கள் – பாரங்களைத் தானமாகப் பெற்றுக்கொண்டு, பதிலுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதாம்.கங்கையில் முக்தியடைவது, குருக்ஷேத்ர போரில் கடுகளவு பொன் தானம் செய்வது, நைமிசாரண்யத்தில் தவம் செய்வது ஆகிய மூன்றாலும் கிடைக்கும் பலன்கள் திருக்கோட்டியூர் பெருமாளை சேவித்தால் கிடைக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.

எங்கே இருக்கிறது? 

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இத்தலம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

நடை திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை. சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் இந்நேரம் சிறிது அதிகரிக்கலாம்.

நன்றி: சக்தி விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here