தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன்

0
1361

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1​927-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை சாத்தப்பனார், தாய் விசாலாட்சி ஆச்சி. இவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். சிறுவயதிலேயே இவரை ஒருவர் ரூ.7000-க்கு தத்து எடுத்து வளர்த்தார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார்.கண்ணதாசனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது, அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை நிறுத்தினார். எட்டாம் வகுப்பு வரை படித்த கண்ணதாசன் 1943-ஆம் ஆண்டு திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.1944-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த ‘திருமகள்’ பத்திரிகை ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17 தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின. 1945-ல் ‘திரை ஒளி’ பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார்.’சண்ட மாருதம்’ ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் இடம் பெற்றார்.அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரிகுமாரி’படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார். கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில்,திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.

கண்ணதாசனின் முதல் பாடலே ‘ஹிட்’ ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த ‘ரத்ன தீபம்’ என்ற படத்தை தமிழில் ‘டப்’ செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர் கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார். 1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் ‘தென்றல்’ என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன.இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார். சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன்மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன்மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்றும் உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here