அரசு பஸ்சை அழகுபடுத்தி, அனைவரையும் கவர்ந்துள்ள, டிரைவர் மற்றும் நடத்துனருக்கு, பயணிகள் தொடர்ந்து பாராட்டு தெரிவிக்கின்றனர்.தனியார் பஸ்களுக்கு நிகராக, அரசு பஸ்களை அழகாக பராமரிப்பதில், சில ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், தேவகோட்டை- திருப்பூர் அரசுபஸ் (டி.என். 63 என் 1782), தனித்துவமாக ஜொலிப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த பஸ்சிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் பஸ் டிரைவர், நடத்துனர்கள் தான்.ஜொலிக்கும் விளக்குபஸ்சில் எல்.இ.டி., விளக்கு, டிவி, டிவிடி பிளேயர், ேஹாம் தியேட்டர், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளை செய்துள்ளனர்.இரவு நேரத்தில், வண்ண விளக்குகளை சிமிட்டி கொண்ட பஸ் வருவதை பார்த்தவுடன், பயணிகள் துள்ளிக்குதித்து பயணிக்கின்றனர்.மேலும், பஸ்சின் உட்புறம், ஜன்னல்களுக்கு திரைச்சீலை, கண்ணாடிகளில், கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சி, படிக்கட்டுகளில் ‘லைட்’ செட்டிங், பஸ் வெளிப்புறம் முழுவதும், ஸ்டிக்கர் ஒட்டி அழகூட்டியுள்ளனர்.நான்கு சக்கரங்களுக்கு, ‘கிளாசிக்கல் வீல் கப்’, அலங்கார விளக்குகள் என, அரசு பஸ்சா இது எண்ணும் வகையில், பளிச்சிட வைத்துள்ளனர்.இந்த பஸ் தினமும் காலை, 8:25 க்கு தேவகோட்டையில் புறப்பட்டு, மாலை, 4:30 மணிக்கு திருப்பூர் வருகிறது. இரவு, 11:00 மணிக்கு திருப்பூரில் புறப்படும் பஸ் மறுநாள் காலை, 5:00 மணிக்கு தேவகோட்டையை அடைகிறது.கடந்த, 2017ல், இதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட வேறொரு பஸ்சை, டிரைவர் முருகேசனின் முயற்சியால், அதன் ஊழியர்கள் இயன்ற அளவு பஸ்சை அழகுபடுத்தி, தமிழக அரசிடம் இருந்து, தலா, 5 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றனர். தற்போது, அதே முருகேசன் முயற்சியால், இந்த பஸ்சும் பளபளக்கிறது.பயணிகள் பாராட்டுபஸ்சில் பயணம் செய்யாவிட்டாலும் கூட, ஸ்டாண்ட்டுக்கு பஸ் வந்தவுடன், பயணிகள் கண்கள் தன்னிச்சையாக அந்த பஸ்சை மொய்க்கின்றன. அந்தளவுக்கு, தேவகோட்டை பஸ், பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், பஸ்சை அழகுற பராமரிக்கும் டிரைவர் மற்றும் நடத்துனர்களை, பாராட்டாத பயணிகளே இல்லை எனலாம்.