பெண்ணின் உயிரைக் குடித்த சுய உதவிக் குழு தாதாவின் பணத்தாசை! – மானாமதுரை பயங்கரம்

0
415

“பாட்டி என்னை மட்டும் சாப்பிட சொல்லுற… அம்மா இருட்டுல கிடக்கு… அத வந்து சாப்பிட சொல்லு. அப்பதான் நான் சாப்பிடுவேன்” என அடம்பிடித்தாள் இரண்டு வயதான சிறுமி பிரியா. இதைக்கேட்ட பாட்டி நாகவள்ளியின் இதயம் சுக்குநூறானது. குடும்பமே கூடி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தார்கள். இந்தச் சம்பவம் மானாமதுரை மருத்துவமனையில் கூடியிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கொம்புக்காரனேந்தல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி தொந்தீஸ்வரி. இவர்களுக்கு 2 வயது மகள் பிரியா, 4 வயது மகன் கதிர்வேல் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தொந்தீஸ்வரியின் சொந்த ஊர் கலியனேந்தல் கிராமம். இந்த ஊரிலிருந்து கல்யாணமாகி கொம்புக்காரனேந்தலுக்கு வந்ததிலிருந்து சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கி வாழ்க்கை நடத்தி வந்தார். இவரது கணவர் உள்ளூரில் கிடைக்கும் வேலைகளை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் பாதியைக் குடித்தே அழித்தார். இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்த தொந்தீஸ்வரிக்கு கைகொடுத்தது சுய உதவிக்குழு. ஆனால், நாளடைவில் அந்த ஊரில் இருக்கும் குழு தலைவி வீராயியிடம் மாட்டிக்கொண்டு மரணத்தின் பிடியில் இருந்த தொந்தீஸ்வரிக்கு கடைசியில் மரணம் மட்டுமே மிஞ்சியது.

மகளை பறிகொடுத்த விரக்தியில் அழுது புலம்பிக்கொண்டிருந்த அப்பா சுந்தரலிங்கம் (அ.தி.மு.க தொண்டர்), அம்மா நாகவள்ளி, தம்பி மாயக்கண்ணன் மூன்று பேரிடமும் ‘என்ன நடந்தது…’ என்று கேட்டோம்…

தற்கொலை செய்துகொண்ட தொந்தீஸ்வரி

“கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘குழுவுக்கு பணம் கட்டலைனு சொல்லி வீராயி என்னை அடிச்சுப் போட்டுட்டாங்க. அப்பா நீ பணம் கொடு’னு வீட்டுல வந்து உட்காந்துருச்சு. அப்பவே கொடுக்க வேண்டிய பணத்தை கடன் வாங்கி கட்டிட்டேன். ‘இனிமேல் நீ குழுவுல கடன் வாங்கக் கூடாது’னு சொல்லி அனுப்புனேன். மறுபடியும் வீட்டுல வந்து உட்காந்துருச்சு. ‘ஏம்மா உன்னத்தான் குழுவுல கடன் வாங்காதனு சொல்லித்தானே அனுப்புனேன். சரி எவ்வளவு பணம் வாங்குனே’ன்னு கேட்டேன். ‘என் போட்டோ ஆதார் கார்டை வச்சு வீராயி முப்பதாயிரம் கடன் வாங்கிட்டு, எனக்குப் பத்தாயிரம் கொடுத்தாங்க. நானும் பணத்தைக் கட்டிட்டேன். இன்னும் இரண்டாயிரம்தான் கட்டணும்னு வீராயி சொன்னுச்சு. சரி நூறு நாள் வேலைபார்த்த பணம் பேங்க்ல ஏறியிருந்ததால அந்தப் பணத்தை எடுத்துட்டு வந்து குழுவுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துருவோம்; என் வீட்டுக்காரரும் கோயம்புத்தூர்ல வேலை பார்த்து பணம் கொண்டு வர்றேன்னு சொல்லியிருக்காரு’னு சொன்ன என் மக தொந்தீஸ்வரி, மானாமதுரை பேங்க்ல பணம் எடுக்கப் போயிருச்சு.அந்த நேரம் பார்த்து ஆட்டோவுல வந்த வீராயி, எங்க சாதி பொண்ணுங்க பாண்டியம்மாள், வீரம்மாள், இருளாயி எல்லாம் வந்து ‘உன் மக எங்கக் குழுவுல பணம் கட்டல. ஆட்டோவுல ஏறுங்க’னு என் பொண்டாட்டி, மகன், பேரன் பேத்திகளை ஏத்திக்கிட்டுப் போயிட்டாங்க. என் மக வந்ததும் நடந்ததைச் சொன்னேன். ஊருக்கு போன் போட்டு பேசுனது. சம்பவம் நடந்தது செவ்வாய்க்கிழமை.’அம்மா, தம்பி, பிள்ளைகள் எல்லாம் ஊர்லதான் இருக்காங்க. நீ போயி முதியோர் பணத்தை எடுத்துட்டு வா’னு என்கிட்டே சொன்ன தொந்தீஸ்வரி, வியாழக்கிழமை காலையில சோறு – குழம்பு வச்சு எனக்கு சாப்பாடும் போட்டு அனுப்பி வச்சது. போயிட்டு திரும்பி வந்த நான் என் மகளை பிணமாத்தான் பார்த்தேன் சாமி” என்றவரை இடைமறித்துப் பேச ஆரம்பித்தான் 14வயதான மாயக்கண்ணன்.“ஆட்டோவுல போகும்போதே செருப்பால என்னையும் அம்மாவையும் அடிச்சாங்க வீராயி. கொம்புக்காரனேந்தல்ல உள்ள வீட்டுல வச்சுப் பூட்டிட்டாங்க. ‘உங்க அக்கா எப்ப பணம் கொண்டு வருறாளோ… அப்பதான் நீங்க வெளியே போகணும்’னு சொல்லி செல்போனை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க. சின்னபிள்ளைகளுக்குக்கூட கொஞ்சூண்டு சோறு போட்டாங்க. வியாழக்கிழமை மதியம் இருக்கும்…. எங்க போனுக்கு கலியனேந்தலில் இருந்து குமாரு போன் போட்டு, அக்கா இறந்த விஷயத்தைச் சொன்னதும்… வீராயி பயந்துபோய் எங்களை ‘ஊருக்குப் போங்கடா’னு அனுப்பிட்டாங்க. வந்து பார்த்தா அக்கா பிணமா கிடந்துச்சு. நான்கூட கடனை அடைச்சுருப்பேன்.ஏற்கெனவே, என் அக்கா மகள் பிரியாவுக்கு திடீர்னு முடியாமல் ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப…. கையில பணம் இல்லை. திருப்புவனம் வடகரையில் ஆடு கிடை வச்சுருக்கிறவர்கிட்ட பணம் வாங்குனோம். ஒருவருசம் ஆடு மேய்ச்சு அந்தக் கடனை அடைச்சுட்டுத்தான் வந்தேன். அதே மாதிரி இந்தக் கடனையும் அடைச்சுட மாட்டேனா? அநியாயமா எங்க அக்கா உயிரை கொன்னுட்டாங்களே. இறந்துபோன உடலை ஆம்புலன்ஸ்ல கொண்டுவரக்கூட பணம் இல்லை. ஊர்ல வசூல் செஞ்சு கொஞ்சம் கொடுத்தாங்க. வீராயிகிட்ட என் அக்கா மாதிரி ஊரே மாட்டிக்கிட்டு முழிக்குது. இன்னும் எத்தனை பேரு சாகப் போறாங்கனு தெரியல” என்றார்.

இறந்துபோன தொந்தீஸ்வரி கணவர் கணேசன் பேசும்போது…

“எங்க ஊர் குழுவுல இருக்கிற எல்லாருடைய போட்டோ ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை எல்லாம் குறைந்தது ஐந்து ஜெராக்ஸ் காப்பி எடுத்து வச்சுருப்பாங்க வீராயி. நாங்க ஒரு லோனுக்குத்தான் கையெழுத்து போடுவோம். ஆனால், வீராயி எங்களுக்கேத் தெரியாமல் எங்க டாக்குமெண்டை வச்சு மூணு லோனு வாங்கியிருவாங்க. அவுங்கக்கிட்ட எதிர்த்துக் கேட்க முடியாது. அடிப்பாங்க. என் மனைவி தற்கொலை பண்ணுன அன்னைக்கு காலையில போன் போட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா அவ எடுக்கல…. எடுத்திருந்தால் என் பொண்டாட்டி செத்துருக்கமாட்டாள். ‘கோயம்புத்தூர்ல வேலை பார்த்த பணத்தைக் குழுவுக்கு கட்ட எடுத்துட்டு ஊருக்கு வர்றேன்’னு சொல்லத்தான் போன் போட்டேன். ஆனா யாரும் போனை எடுக்கல. நாங்க அவுங்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. ஒன்னு போலீஸ் கொடுக்கணும். இல்லாட்டி சாமிதான் வீராயியைத் தண்டிக்கணும்” என்கிறார்.

வீராயி பற்றி காவல்துறையினரிடம் விசாரித்தோம்.

“கொம்புக்காரனேந்தல் வீராயினா டி.எஸ்.பி ஆபிஸே அலறும். அந்த அளவுக்கு கேவலமாக மண்ணை வாரித் தூற்றுவதும் கெட்ட வார்த்தைகளால் பேசுவதுமாக அருவருப்பாக நடந்துகொள்வார். 2015 ஆம் ஆண்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்துல ஒரு வழக்கு போட்டாங்க. அதுக்குப் பிறகு 15 புகார்கள் வீராயி மீது கொடுக்கப்பட்டு சமாதானமாக வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். டி.எஸ்.பி வெள்ளத்துரை இருக்கும்போது வீராயி இருக்கும் இடமே தெரியல. டி.எஸ்.பி கருணாநிதி, புருசோத்தமன் ஆகியோர் இருக்கும்போது வீராயி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கல. காரணம் அரசு வழக்கறிஞர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என வீராயிக்கு ஆதரவாக எல்லோரும் கூடிவிடுவார்கள். சுருக்கமாகச் சொல்லணும்னா வீராயி ஒரு ‘சொர்ணாக்கா’. மானாமதுரையில் இருக்கும் ஒவ்வொரு வங்கி மேனேஜரும் வீராயினா தெரியாம இருக்காது. மற்றக் குழுத் தலைவிகளைவிட அதிகமான கமிசன் வங்கி மேனேஜருக்குக் கொடுக்கும் பழக்கம் வீராயிக்கு உண்டு. ஆகையால வீராயி கொடுக்கும் லோன் விண்ணப்பம் என்றாலே வங்கி அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டுவிடுவார்கள்” என்றனர்.தற்போது, வீராயி மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடந்துவருகிறது. பிரச்னையை எதிர்கொள்ள வழிதெரியாமல், தற்கொலை செய்துகொண்ட தொந்தீஸ்வரியின் குழந்தைகள் தாயை இழந்து தவித்துவருகின்றன… என்னவென்று சொல்ல…?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here