சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காரைக்குடி அருகே குளுகுளு வீடு கட்டி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி அசத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். மனைவி விசாலட்சி, மகள் தெய்வானையுடன் வசித்து வருகிறார். மகன் அமெரிக்காவில் இருக்கிறார். பழனியப்பன் தனது ஓய்வுக்கு பின் புது வீடு கட்ட வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டார். அதில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், அதேநேரத்தில் வீடும் வெப்பத்தின் தாக்கம் இன்றி குளுமையாக இருக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி, பழைய முறையில் சுடாத செங்கல் கொண்டு 3,500 சதுரடியில் வீடு கட்டி வருகிறார்.
இதுகுறித்து பழனியப்பனிடம் கேட்டபோது… இதுபோன்ற வீடு கட்டுவதற்கு புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்தேன். அதன்படி கட்டணம் செலுத்தி 10 நாட்கள் பயிற்சி பெற்று முடித்த பின் வீடு கட்டும் பணியை துவக்கினேன். வீடு கட்டும் இடத்தின் பின்புறம் சுடாத செங்கல்களை நாங்களே தயார் செய்தோம். இதில் களிமண், ஆற்று மணல், சிறிதளவு கிரசர் தூசி, சிமென்ட் கலவை சேர்த்து அச்சில் இட்டு அதை 28 நாட்கள் வெயிலில் காய வைத்தோம். ஆனால், நெருப்பில் செங்கல்களை சுடவில்லை. இதே கலவையை கொண்டு கட்டிடமும் எழுப்பப்பட்டது.
சுவரில் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பூசாமல் விடப்பட்டுள்ளது. இவ்வகையான கட்டிடம் கோடையிலும் கூட வெயிலின் தாக்கத்தை உள்ளே விடாமல் நல்ல காற்றோட்டம், குளு குளுவுடனும், மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில் வெளிச்சத்துடனும் வைத்திருக்கும். செட்டிநாடு வீடுகளைப்போல் முற்றம், வளைவுகளுடன் வீடு கட்டப்பட்டுள்ளது. 3500 சதுரடியில் கீழ் தளம், முதல் தளம், மற்றும் அடித் தளத்தில் ஓர் அறை என கட்டப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். மேலும் இந்த வீட்டில் விழும் மழைநீரை சேகரித்து ஆழ்துளைக்கிணறுக்கு அடியில் செல்லும் வகையில் அமைத்துள்ளோம். கழிவுநீரை மறுசுழற்சி செய்து செடிகள் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.