சிவகங்கை மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மற்றொரு கீழடி

0
1605

சிவகங்கை மாவட்டத்தில் மற்றொரு கீழடியாக காளையார்கோவில் பகுதியில் பழங்கால அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்கேயும் அகழாய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம். திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையில் நடந்த அகழாய்வில், தமிழர்கள் பண்பட்ட நாகரிகம், காலச்சாரம், மேம்பட்ட அடிப்படை கூட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருநகர வாழ்க்கை, கல்வி, போர்க்கலைகளுடன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. தற்போது சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் அருகே உள்ள கிராம எல்லைகளில், எந்த பயன்பாடும் இல்லாமல் பொட்டல்களில் தமிழர்களின் கலைநயமிக்க மண்பாண்ட துகள்கள், ஒளி வீசும் அணிகலன்கள், சங்கு வளையல்கள், கண்ணாடி ஆபரணங்கள், கைவினை பொருட்கள், யானை தந்தத்தாலான அணிகலன்கள், கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற ஓடுகள், தாழிகள், ஏனங்கள், தானியங்களை சேமிக்கும் குதிர்கள், கல் மணிகள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள், இரும்பு, செம்பு உலோக ஆயுதங்களின் பாகங்கள், விளையாட்டு பொருட்கள், முதுமக்கள் தாழி ஆகியன உள்ளன.காளையார்கோவிலில் சிதைந்த நிலையில் சுற்றுச்சுவர் மட்டுமே உள்ள பாண்டியன் கோட்டையில் தொடங்கி கண்டனிக்கரை, பகையஞ்சான், இலந்தக்கரை, வேலாரேந்தல், கூத்தனி, பாளையேந்தல், தவளிமண்டபம், மாராத்தூர், பீக்குளம் என ஏராளமான கிராமங்களின் எல்கைகளில் பழங்கால பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன. நாட்டாறு என அழைக்கப்படும் கால்வாயின் கரையில் மேற்கொண்ட பொருட்கள் கிடைக்கும் இடங்கள் ஊர்களாக இருந்திருக்கின்றன. மிகப்பெரிய ஆறு அழிந்த நிலையில் தற்போது சிறிய காலவாயாக உள்ளது. இந்த பொருட்கள் கிடைக்கும் பொட்டல்களின் ஒவ்வொரு கிராம எல்லையிலும் அய்யனார் கோவில், முனீஸ்வரர் கோவில் உள்ளன. இவைகள் சில கிராமங்களில் “உச்சி பொட்டல்” என அழைக்கப்படுகின்றன. பழந்தமிழரின் தொன்மைகளை சுமந்துள்ள இப்பகுதியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன் மூலம் பழந்தமிழர் நாகரீகம் வெளியில் கொண்டு வரப்படும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வரலாற்று ஆர்வலர் ரமேஷ்(இலந்தக்கரை) கூறியதாவது, “கீழடியில் கிடைத்த பொருட்களும், இப்பகுதியில் கிடைக்கும் பொருட்களும் ஒன்று போல் உள்ளன. இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான கால இடைவெளி ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகும். கி.மு., மற்றும் கி.பி., என இரண்டு கால கட்டத்தின் வரலாற்றை இப்பகுதி தன்னுள் கொண்டுள்ளது. விவசாயத்தை பிரதானமாக வைத்து ஆற்றின் கரையோரங்களில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு வைகையாற்றின் கிளையாறு இருந்துள்ளது. போர், வறட்சி, நோய் தாக்குதல், இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களினால் இப்பகுதியில் இருந்த ஊர்கள் அழிந்துள்ளன. இங்கு வெவ்வேறு காலகட்டங்களில் போர் நடந்ததற்கான வரலாற்று பதிவுகள் உள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் குறித்து மொகஞ்சதாரோ, ஹரப்பா, கீழடியில் கிடைத்த அரிய ஆதாரங்களைப் போலவே இங்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்” என்றார்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here