சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்-கடும் அவதியில் பொதுமக்கள்

0
1197

சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுவதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 24மணி நேரமும் மின்சாரம் இருக்கும், மின் தடை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் முன்பு மின் தடை செய்யப்படும் நேரங்கள் குறித்து அறிவிப்பு செய்யப்படும். ஆனால் தற்போது மின் தடை செய்வது குறித்து அறிவிப்பில்லை. மாதம் ஒரு முறை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு பகுதிவாரியாக நாள் முழுவதும் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. சிவகங்கை நகர் உட்பட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒரு மணி நேரம் வரையும், கிராமப்பகுதிகளில் கூடுதலாக பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

எப்போது மின் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பில்லாததால் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் உள்ள அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கடுமையான கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் வெப்பம் காணப்படுகிறது. பகல் 12 மணி முதல் 3 மணி வரை கடுமையான வெப்பம் உள்ள நேரங்களில் மின் தடை செய்கின்றனர்.இதுபோன்ற நேரத்தில் மின்தடை செய்யப்படுவதால் முதியோர், பெண்கள், குழந்தைகள் கடும் சிரமமடைகின்றனர். வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெளியில் வெயில் கொளுத்துகிறது. மின் தடை செய்யப்படுவதால் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோல் இரவு நேரத்திலும் மின் தடை செய்கின்றனர். இரண்டு மணி நேரம் எப்போது மின் தடை செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்ட காலத்தில் இந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என அதற்கேற்றார்போல் வேலைகளை அமைத்துக்கொண்டனர். தற்போது எப்போது மின்சாரம் போகும் என்ற அறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்படுவதால் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனம் நடத்துவோர், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் கூறியதாவது, எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை செய்கின்றனர். தற்போது அறிவிப்பில்லாததாலும், கோடைகாலம் என்பதாலும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இரவு நேரத்தில் மின்தடை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மின் தடை செய்யப்படும் நேரத்தை முன்பு போல் அறிவிப்பு செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here