மதிய உணவு சாப்பிட தினமும் 1 கிமீ அலையும் அரசு பள்ளி மாணவர்கள்

0
1058

சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மதிய உணவிற்காக உச்சி வெயிலில் தினமும் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது.சிவகங்கை அருகே குமாரபட்டியில் செயல்பட்டு வந்த அரசு நடுநிலைப் பள்ளி, மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய கட்டிடம் கட்டாததால் ஏற்கனவே செயல்பட்டு வந்த நடுநிலை பள்ளி கட்டிடத்திலேயே உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வந்தது. குமாரபட்டியிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உயர்நிலை பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது.இந்த புதிய கட்டிடத்தில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். புதிய கட்டிடத்தில் சத்துணவு கூடம் அமைக்கவில்லை.இதனால் ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மதிய உணவு தயார் செய்யப்படுகிறது. மாணவ, மாணவிகள் உச்சி வெயிலில் தினமும் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், ‘‘புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலை பள்ளியிலிருந்து கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பழைய பள்ளி கூடத்தில் மதிய உணவு அருந்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்நிலை பள்ளி வளாகத்தில் சத்துணவுக் கூடம் அமைத்து, அங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்’’ என்றனர்.
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கேட்டபோது, ‘‘இதுகுறித்து முறையான தகவல் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. விசாரணையில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுத்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் பிரச்னை சரி செய்யப்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here