சிவகங்கை : கால்வாய்கள் காணாமல்போனதால் மழை பெய்தும் குளங்களை எட்டாத தண்ணீர்

0
1747

சிவகங்கையில் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்வாரப்படாமலும் இருப்பதால் நல்ல மழை பெய்தும் குளங்கள் காலியாகவே உள்ளன.
சிவகங்கை நகரின் மையப்பகுதியில் தெப்பக்குளம், உடையார்சேர்வை ஊருணி, சாத்தப்பர் ஊருணி, ஆத்தா ஊருணி, குண்டூருணி, செட்டி ஊருணி உள்ளிட்ட பல்வேறு குளங்கள், ஊருணிகள் உள்ளன. நகரின் மையப்பகுதியில் பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்று பாரம்பரியம் கொண்ட தெப்பக்குளமே சிவகங்கை நகரின் நீர்ப்பிடிப்பு ஆதராமாக விளங்குகிறது. தெப்பக்குளத்தில் நீர் இருந்தால் நகரில் ஆழ்துளைக் கிணறுகளில் சுமார் நூறடிக்குள் தண்ணீர் கிடைக்கும். தெப்பக்குளத்தில் நீர்குறைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே போகும்.

இங்கு உள்ள ஒவ்வொரு குளமும் சங்கிலித்தொடர்போல் தொடர்பு கொண்டது. ஒவ்வொரு குளமாக நிறைந்து இறுதியில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். தெப்பக்குளம் நிறைந்து அதன் பிறகு அருகில் விவசாய பயன்பாட்டுக்குரிய கண்மாய்களுக்கு நீர் செல்லும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தக் குளங்கள், கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு படிப்படியாக கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. தற்போது கால்வாய்கள் இருந்த சுவடே இல்லை. 2013ம் ஆண்டு குளங்கள் தூர்வாரப்பட்டன. இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களாக தெப்பக்குளம் பராமரிப்பு செய்யப்பட்டது. நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், ஏராளமான கால்வாய்கள் ஆக்கிரமிப்பிலும் இருப்பதால் குளங்கள் தூர்வாரப்பட்டும் எவ்விதப் பயனும் இன்றி உள்ளது.

கடந்த சில நாட்களாக சிவகங்கை நகர்ப்பகுதிக்குள் 1.98 செ.மீ அளவிற்கு கனமழை பெய்தது. தமிழகத்தில் கனமழை பெய்த இடங்களில் சிவகங்கையும் ஒன்று. ஆனால் தெப்பக்குளம் நீரின்றி எப்போதும்போல் காலியாக கிடக்கிறது. பெரும்பாலான குளத்திற்கு நீர்வரத்து இல்லை. இது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், “அரசு சார்பில் அனைத்து நீர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் பாராபட்சமின்றி அகற்ற வேண்டும். கால்வாய்களை மீட்டு அவற்றைத் தூர்வாரினால் மட்டுமே குளங்களுக்கு நீர்வரத்து உருவாகும். குளங்களில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுதோறும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கால்வாய்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here