சிவகங்கை அருகே விநோதம் : ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா

0
6865

சிவகங்கை அருகே திருமலை ஊராட்சியில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைகருப்பசாமி கோயில் உள்ளது. 300 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் விநோதமான முறையில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் சித்திரை முதல் தேதி காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர்.இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி காப்பு கட்டி ஆண்கள் விரதம் துவக்கினர். திருவிழா துவங்கியதும், கோயில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன. 8ம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக கோயிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய அரிவாள், மணி, கோவில் காளைகள் , கருப்பு நிற வெள்ளாடுகளுடன் அவர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர்.தொடர்ந்து 381 ஆடுகளை வரிசையாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டது. பொங்கல், சமைத்த இறைச்சி, ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையடுத்து பூசாரிகள் சாமியாடினார். மழை வளம், செழிப்பான விவசாயம், நாள்பட்ட நோய்கள், திருமணத் தடை, குழந்தையின்மை, தொழில் நஷ்டம் தொடர்பாக சுவாமி யிடம் அருள் வாக்கு கேட்டனர்.அதிகாலை 4 மணியளவில் பல்லியின் அசரிரீ கேட்டதும் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். பலியிட்ட 381ஆடுகளின் தலைகள் விழாவிற்கு வந்திருந்த ஒரு பிரிவினரிடம் வழங்கப்பட்டன. ஆடுகளின் தோல்களை தீயிட்டு எரித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here