சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ கழிவுகள், கழிவுநீரால் சுகாதாரக்கேடு

0
616

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் உள்ள கண்மாயில் தேங்கும் கழிவுநீர் மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத் தொடங்கியது. ஏற்கனவே நேரு பஜார் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி பின்புற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதனைக்காக வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் உள்ள மருத்துவ கழிவுகள், பாலித்தீன் பைகள், ஊசி உள்ளிட்ட வீணாகும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகள் மருத்துவமனையின் பின்புறம், மதுரை, மானாமதுரை பைபாஸ் இணைப்புச்சாலை அருகே கொட்டப்படுகிறது. மருத்துவக்கழிவுகள் இதே இடத்திலேயே ஆண்டுக்கணக்கில் கொட்டப்பட்டு வரும் நிலையில் அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. மருத்துவமனையில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மருத்துவமனையின் பின்புறம் உள்ள கண்மாயில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லை. மருத்துவ கழிவுகள் மற்றும், கழிவுநீரால் கடுமையான சுகாதாரக்கேடு நிலவுகிறது. கழிவுகளை அகற்றாமல் தீப்பற்றவைப்பதால் பல நாட்கள் எரிந்துகொண்டே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.பொதுமக்கள் கூறுகையில், ‘மருத்துவமனை மற்றும் கல்லூரியில் இருந்து வெளியாகும் கழிவுநீர் செல்ல எந்த வசதியும் ஏற்படுத்தாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அலட்சியமாக உள்ளனர். இதனால் இப்பகுதி கண்மாய் பாதிக்கப்பட்டு கழிவுநீர் தேங்கும் கண்மாயாக உள்ளது. மருத்துவ கழிவுகளை இதுபோல் திறந்த வெளியில் கொட்டுவது மேலும் நோய் பரப்பவே செய்யும். சில மாதங்களுக்கு ஒரு முறைகூட அகற்றாமல் ஆண்டுக்கணக்கில் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதால் கடுமையான சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். கழிவுநீர் செல்லவும், கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here