சிவகங்கை : அரசு பள்ளி மாணவர்கள் பயணிக்க ஆட்டோவுக்கு மாதம் ரூ.20 ஆயிரம்: ஓய்வூதியரின் தாராள மனசு

0
2645

சிவகங்கை அருகே 24 அரசு பள்ளி மாணவர்கள் பயணிக்க, ஆட்டோ கட்டணமாக மாதம் 20 ஆயிரம் ரூபாயை சித்தலூரைச் சேர்ந்த ஓய்வூதியர் வழங்குகிறார்.
கோவானூரில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து ‘சென்டம்’ எடுக்கிறது. இரு ஊர்களுக்கும் இடையேயான பாதை மாயமானதால், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால் கோவானுரைச் சேர்ந்த 24 மாணவர்கள் பெரியக்கோட்டையில் படித்தனர். அவர்களை சித்தலூர் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் பீட்டர் முயற்சி எடுத்தார். வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே குழந்தைகளை அனுப்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.சித்தலூர் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனியாண்டி, 2 ஆட்டோக்களை ஏற்பாடு செய்தார். ஆதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் வழங்கவும் ஒப்புக் கொண்டார். இதனால், குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

முனியாண்டி கூறியதாவது: எனது மகன் நல்ல நிலையில் உள்ளார். இதனால், ஓய்வூதியத் தொகையை ஏழை மாணவர்களுக்கும், பணிபுரிந்த பள்ளிக்கும் செலவழிக்கிறேன். சமீபத்தில் பள்ளிவசதிக்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாணவர்கள் சிரமமின்றி வந்து செல்ல சாலையில், இருபுறமும் இருந்த சீமைக்கருவேல மரங்களை சொந்த செலவில் அகற்றினேன். கோவனூர், சித்தலூர் இடையே பாதையை கண்டறிந்து விரைவில் தார் சாலை அமைத்தால், மாணவர்களுக்கு அலைச்சல் குறையும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here