சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர்!

0
1456

சிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் செட்டப்பைப் பார்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து, மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ‘தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்’ பற்றிப் பேசினார்.தமிழக ஆளுநர் பன்வாரிலாம் புரோகித், தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் நடைபெற்ற தூய்மை இந்தியா விழிப்புஉணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், “உங்கள் ஊரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் ஊர் பெயர் சிவனையும், கங்கையையும் கொண்டது. கங்கையைச் சுத்தம் செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆகையால் நகர் முழுவதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் வராது, மருத்துவச் செலவு குறையும்” என்றார். இதனைத் தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள சாலைகளில் நடந்து சென்ற ஆளுநர், அருகிலுள்ள பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்தார்.அங்கு டயர், பேப்பர் கப், பிளாஸ்டிக் பாட்டில் கிடந்ததைப் பார்த்து,  “இந்த பங்க் ஓனர் எங்கே?” என்று கேட்டார். அங்குள்ள ஊழியர்கள், ஓனர் மதுரை சென்று விட்டதாகச் சொன்னதும், சிவகங்கை எஸ்.பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்டோர், ஊழியர்களை வேகப்படுத்தி அங்கிருந்த குப்பைகளை அகற்றச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்னபூர்ணி ஹோட்டல் மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்களை அழைத்து, “உங்கள் ஊரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் சங்கத்தின் மூலமாக விழிப்புணர்வு நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களிடம் வழங்க வேண்டும்” என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார். ஆளுநரின் பேச்சுக்கு அவர்கள் தலையாட்டினார்கள்.பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள், ஆளுநர் வருகையையொட்டி, சுதந்திரம் கிடைத்தாற்போன்று பளிச் எனக் காணப்பட்டது. அந்தக் கழிப்பறைகள் இதுவரைக்கும் நோய்களைப் பரப்பும் இடமாகவே இருந்திருக்கிறது. ஆனால், கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்கும் இடம் உள்ளிட்டவை நகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன. வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் இருந்து ஆளுநர், மனுக்களைப் பெற்றுக் கொண்டார். 84 மனுக்கள் பெறப்பட்டன. 10 கம்ப்யூட்டர்களில், அவற்றை வருவாய்த் துறை ஊழியர்கள், பரபரப்பாகப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.

காளையார்கோவில் பகுதியில் இருந்து வந்திருந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று கோரி மனு அளித்தார். இவரைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட வைகை பாசன சங்கத்தின் தலைவர் ஆதிமூலம், “காமராஜர் ஆட்சிக்காலத்தில் வைகை குண்டாறு திட்டம் செயல்படுத்த 175 கோடியில் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது அதே திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி செலவாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டுவரவேண்டும் என்றும், சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு மனு அளித்தார். அதையெல்லாம் கேட்டறிந்த ஆளுநர், அதற்குத் தலையை மட்டுமே ஆட்டினார். “வருவாய்த் துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. குற்ற வழக்கு உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு இருக்கிறது. எனவே வெளிப்படையான நிர்வாகம் இருக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்திருக்கிறார் தாசில்தார் மகாதேவன்.மதுரைக்குக் கடந்த ஆண்டு வந்திருந்தபோது ஆளுநரிடம் கொடுத்த மனு மீது இன்னும் நடவடிக்கை இல்லையென்று கூட்டுறவுத் துறை ஊழியர் பாக்கியம் இரண்டாவது முறையாகப் புகார் கொடுக்க வந்திருந்தார்.பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆசிய அளவில் வெண்கலம், வெள்ளிப் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுக்க வேண்டிய வேலை இன்னமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர், ஆளுநரிடம் முறையிட்டார். இதற்கிடையே ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலைசெய்யச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாகவும், அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.தவிர, அரச மரத்தின் கீழ் நின்றுகொண்டு, குப்பைகளைப் பெருக்குகிறோம் என்ற போர்வையில், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு ஏற்கெனவே போடப்பட்டிருந்த வேப்ப மரத்தின் இலைகள் உள்ளிட்ட குப்பைகளை ஆளுநரும், அதிகாரிகளும் அப்புறப்படுத்திய நிகழ்வை, அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் பார்த்ததுடன், அதுபற்றி கமெண்ட் அடிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

‘தூய்மை பாரதம்’ விழிப்புணர்வு ஒரு மணிநேரம்கூட முழுமையாக நடைபெறவில்லை. இதற்காக மதுரையில் இருந்து சிவகங்கை வரையிலும், மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரையிலும் இரண்டு நாள்கள் கொட்டும் பனியிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் 850-க்கும் மேற்பட்ட போலீஸார். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே, காலை 9 மணியில் இருந்தே அரசு பஸ்கள், ஆட்டோக்கள் எதையும் இயங்க விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளிசெல்லும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையில் சாலை வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாமல் பெரும்பாலான பஞ்சாயத்துகள், யூனியன் அலுவலகங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆளுநர் வருகைக்காகச் செல விடப்பட்ட தொகை, சிவகங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி விகடன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here