சிங்கம்புணரியில் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

0
545

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராகவும், தொழில் நகராகவும் சிங்கம்புணரி விளங்கி வருகிறது. தாலுகா அந்தஸ்து பெற்றுள்ள சிங்கம்புணரியில் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளன. சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிங்கம்புணரியில் உள்ள மேலூர் சாலை, பெரியகடை வீதி சாலை உள்ளிட்டவை சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த சாலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து சந்தி வீரன் கூடம் வரை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த சாலையை மேலூர் மற்றும் சிங்கம்புணரி, மேலூரை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விபத்து ஏற்படும் வகையில் சாலை சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையில் சென்று வருகின்றனர்.

மேலும் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சிங்கம்புணரி நகர வியாபாரிகள் கூறுகையில், சாலை சீரமைப்பு என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் கண் துடைப்பாக செய்யப்பட்டது. ஆனால் சீரமைத்த சில வாரங்களிலேயே சாலை மீண்டும் சேதமடைந்துவிட்டது. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். மேலும் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் தேங்கும் தண்ணீரால் மேலும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே சாலை சீரமைப்பதுடன், கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here