புகைப்படம் நன்றி: திரு. Joe Sebastian
நாணயம் தவறி தவறு செய்பவர்களுக்கு நாணயத்தாலே தண்டனை கொடுத்தும், தவறு செய்தவர்களை திருத்தும் தலமாக கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சிவகங்கை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சியில் அமைந்துள்ளது. காளியிடம் நமக்கு நேரிட்ட தீங்குகளையும், அவை யாரால் நேரிட்டன என்பது குறித்தும் முறையிட்டால், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக குற்றவாளிகளை அம்மன் தட்டி கேட்பார். இந்த நேர்த்திகடனை செலுத்துவதற்கு, அம்மனின் பூஜை தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன்மீது நம் கையை வைத்தபடி நம்மை துன்பப்படுத்தியவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பூசாரி சொல்வதை நாம் அதை திரும்ப கூற வேண்டும். பூசாரி தெளிவாக அம்மனிடம் எடுத்து கூறுவதை நாமும் வாய்விட்டு உரக்க குரல் கொடுத்து அம்மனிடம் முறையிட வேண்டும். அதன் பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அம்மன் சந்நிதிக்கு பின்புறம் எடுத்து செல்ல வேண்டும். அங்கே ஈட்டிகள் சுற்றி அமைந்துள்ள ஒரு சிறிய பீடத்தில் நம் குறைகளை மனதில் நினைத்து கொண்டு சுத்தியால் நாணயத்தை ஓங்கி அடித்து வெட்ட வேண்டும். அதன்பிறகு நமக்கு தீமை செய்தோரின் பெயர்களை காகிதத்தில் எழுதி ஈட்டியில் செருகி அதன்மீது எலுமிச்சை பழம் ஒன்றை குத்தி வைக்க வேண்டும்.