மருதுபாண்டியரிடம் அரியணை கேட்ட குப்பமுத்து ஆசாரி

0
895

காளையார்கோவிலுக்கு தேர் வேண்டுமென மருதிருவர் குப்பமுத்து ஆசாரியை அணுகியபோது கால ஜோதிடத்தைக் கணித்த ஆசாரி ‘தற்போது தேர் செய்வது சரியல்ல’ என்றுரைத்தார். அதிர்ந்த மருதிருவர் தேர் செய்தே ஆகவேண்டுமென வலியுறுத்த ஆசாரி நிபந்தனை ஒன்றை விதித்தார். தேர் வெள்ளோட்டம் விடப்படும் முன் நான் கேட்பதை எனக்கு அருளவேண்டும் என்றார். மருதிருவர் ஒப்புக்கொண்டபின் தேர் தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடும் நேரத்தில் ஆசாரி தேரை மறித்து தன் நிபந்தனையை நினைவூட்டினார். என்ன வேண்டுமென மருதிருவர் கேட்க இந்நாட்டின் அரியணை வேண்டுமென ஆசாரி தயங்கியபடி கூற வாளெடுத்த தம்பியை தடுத்த பெரியமருது கோவில் தேருக்காக தன் பதவியை துறந்து ஆசாரிக்கு முடிசூட்டினார். 

தேரில் மன்னராக ஆசாரி அமர்ந்திருக்க வெள்ளோட்டம் விடப்பட்ட சற்று நேரத்தில் தேர் அலம்ப இருப்பு தடுமாறிய ஆசாரி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிருக்குப் போராடினார். மருதிருவர் அவரைத் தாங்கிக்கொண்டனர். அப்போது ஆசாரி கூறுகிறார் ‘நான் கால ஜோதிடத்தில் கணித்தபோது வெள்ளோட்டத்தன்று மன்னர் இறக்க நேரிடுமென்று ஜோதிடம் கூறியது. ஆனால் நீங்களோ கட்டாயம் தேர் வேண்டும் என்றீர்கள். உங்கள் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும் உங்கள் உயிரைக் காக்க எண்ணியும் அரியணை கேட்ட பாவியானேன் அடியேன்’ என்றுரைத்து மாண்ட குப்பமுத்து ஆசாரியைக் கண்டு கண்ணீர் வடித்தனர் மருது பாண்டியர்கள். தேருக்காக பதவி துறந்த மருதிருவர், மண்ணைக் காக்க வாளெடுத்த வேலுநாச்சியார், அரசரைக் காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி, குயிலியென எண்ணற்ற தியாகச் சுடர்களை பெற்றெடுத்த சிவகங்கை மண்ணைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here