சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் தமிழகமெங்கும் புகழ்பெற்றதாகும். மலையின் அமைப்பு மயில் போன்றுள்ளது. மலை மீது முருகன் கோவிலும், மலையின் கீழ் சிவன் கோயிலும், தோகை போன்று வடிவமைப்பு உள்ள இடத்தில் தோகையடி விநாயகர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் பாண்டியர் காலத்து மூன்று குடைவரைக் கோவில்களும், மலையிலேயே அமைக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும், குடைவரைச் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்ட கடவுளர் உருவங்களும் உள்ளன. வைகாசி, விசாகமும், பங்குனி உத்தரமும் இங்கு பெரியத் திருவிழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தோறும் திரளான பக்தர்கள் வருகின்றனர்.ஆத்தங்குடி காடன் செட்டியார் எனும் தனவணிகரால் தரிசனத்திற்காக அழைத்து வரப்பட்ட மருது சகோதரர்கள் ஆண்டவனுக்குத் தக்க கோயில் இல்லாதது கண்டு, இம்மலை மீது திருக்கோயிலைக் கட்டுவித்தனர். இங்கிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ‘மருதாவிரி’ என்ற அழகிய குளத்தையும், கரையில் ஆயிரம் தென்னை மரங்களையும் உருவாக்கினர். ஆறுமுகப்பெருமானின் உற்சவ மூர்த்தி சன்னதியில் ஆஜானுபாகுவாகக் காணப்படும் 2சிலா ரூபங்கள் அண்ணன், தம்பியான வெள்ளை மருது, சின்னமருது ஆவார்கள்.