குடிக்க நீரின்றி மக்கள் அவதிப்படும்போது குளிப்பதற்கு காவிரி நீரை குளத்தில் நிரப்பிய அவலம் அதிகாரிகள் அலட்சியம்

0
1077

இளையான்குடி பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குளிப்பதற்காக காவிரிக் குடிநீரை குளத்தில் நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சுற்றிலும் பெரும்பாலும் கிராமங்கள் அதிகமாக உள்ளன.  கடந்த சில ஆண்டுகளாகப் பொய்த்த மழையால், கண்மாய், குளங்கள் வறண்டுபோயுள்ளன. இதனால் காவிரி குடிநீர் மட்டுமே இந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் காவிரிக் குடிநீர்தான் ஜீவ நாடி.
ஆனால்,  இளையான்குடி பகுதியில் காவிரி குடிநீர்க் குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  இதனைச் சீரமைக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டும்காணாமல் உள்ளனர். மேலும், இளையான்குடி பகுதியிலிருந்து ராமநாதபுரம்  பகுதிக்குச் செல்லும் வழியில் பல கிராமங்கள் காவிரிக் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆனால், இளையான்குடி அருகே கபேரியல்பட்டிணத்தில் குளிப்பதற்காக காவிரி குடிநீரை குளத்தில் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழாய் உடைந்து  பல நாட்களாக குடிநீர் வெளியேறிய நீரை கால்வாய் வெட்டி சிலர் குளத்திற்கு திருப்பிவிட்டுள்ளனர். இதில் அந்தக் குளம் நிரம்பி உள்ளது.  மழைக்காலத்தில் நிரம்பும்போது இந்தக் குளத்தைத்தான் அப்பகுதி மக்கள் குளிக்கப் பயன்படுத்தி வருவது வழக்கம். தற்போது இந்தக் குளம் நிரம்பியுள்ளதால் அதில் குளித்து வருகின்றனர். குடிநீர் வீணாவது தெரிந்தும் உடைப்பை சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். ஆனால், விநியோகிக்க வேண்டிய கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீரை சரி செய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் என்பவர் கூறுகையில், “இளையான்குடி பகுதியில் குடிக்கவே தண்ணீர் இல்லை. ஆனால் குளத்தை நிரப்பியுள்ளனர். அதனால் பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய  கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here