வரலாறு கேட்கும்போதே இந்தக் கோயிலை பார்த்து வரலாம் என்கிற எண்ணம் எல்லோருக்குமே தோன்றும். 1780ஆம் ஆண்டு வீரப்பேரரசி வேலு நாச்சியார் சீமையை மீட்ட பிறகு காளையார்கோவில் பாண்டிய மன்னர் கட்டிய கோபுரத்தின் அருகில் முத்துவடுகநாத தேவர் அவர்களின் நினைவாக சொர்னகாளிஸ்வரர் ஆலயத்தில் நவசக்தி ராஜகோபுரமும் அதன் கீழ் நூற்றங்கால் மண்டபத்தில் வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் திருவுருவச் சிலையையும் நிறுவ ஆனையிட்டார்.அந்த வேலைகளை மருது சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார் மருது சகோதரர்களும் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் ஆனைக்கினங்க கடுமையாக உழைத்து நவசக்தி ராஜகோபுரத்தை கட்டினர்.1793ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்க்கு குடமுழக்கு பூஜைகள் செய்து வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் அவர்களின் திருவுருவ சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து மக்கள் வெள்ளத்தில் காளையார்கோவில் நவசக்தி ராஜகோபுரம் கீழ் உள்ள நூற்றங்கால் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து நிறுவினர்.இந்த சிவன் கோயில் சிவகங்கையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மருது சகோதரர்களால் கட்டப்பட்ட இரண்டு ராஜ கோபுரங்களை உடைய கோயில். இந்தக் கோயிலுக்குத் தேவைப்படும் செங்கல்கள் மானாமதுரை அருகிலுள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி கைமாற்றி, செங்கோட்டை, மானாமதுரை, முடிக்கரை வழியாக காளையார் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டதாம்.கோயில் கோபுரங்களை பீரங்கி மூலம் இடித்து விடுவதாக மிரட்டியே மருது சகோதரர்களை வெளியில் வரச் செய்து தூக்கிலிட்டு இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாலேயே இவர்களுடன் சேர்ந்த 500 பேரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டிருக்கிறார்கள். பழங்கால தமிழகக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவே இன்றும் திகழ்கிறது இக்கோயில். 18 அடியில் கோயிலை சுற்றி பெரிய மதில் சுவரும், கோயிலின் தென்புறம் பெரிய தெப்பக்குளமும் இருக்கிறது.மருது சகோதரர்களின்நினைவுச்சின்னமாக கோயிலின் உள்ளே கற்சிலைகளும், கோயிலின் எதிர்புறத்தில் சமாதியும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தியைத் தாண்டி, விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மருது சகோதரர்களுக்காகவே இந்தக் கோயிலை பார்வையிடலாம்.