காரைக்குடி பள்ளத்தூரில் வாழ்ந்த ஆச்சி மனோரமா

0
721
‘ஜி‑ல்ஜில் ரமாமணி’யாகக் கொஞ்சியவரை, தமிழகமே ‘ஆச்சி’ என்று செல்லமாக அழைத்தது. இந்திய அளவில் ‘இவருக்கு நிகர் இவர்’ என்று ஒப்பீடு செய்ய முடியாத வெகு சிலருள் மனோரமாவுக்கும் ஓர் இடம் உண்டு. 1939-ல் மனோரமா பிறந்த ஊர் ராஜமன்னார்குடி. பெற்றோர் காசிகிளாக்குடையார் – ராமாமிர்தம்மாள்.பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் ‘ஆச்சி’ என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது.
 
1952-ல் மேடை ஏற்றப்பட்ட ‘யார் மகன்’ நாடகம்தான் ஆரம்பம். ‘அந்தமான் கைதி’ மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம். நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்! அறிஞர் அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’ நாடகத்திலும், அவரோடு ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’, ‘ஓர் இரவு’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘உதயசூரியன்’ நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்! முதல் சினிமா ‘மாலையிட்ட மங்கை’. நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300-க்கு மேல். இதனால் ‘கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் மனோரமா. இவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணதாசன்!
மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய வித்தகி!
 
‘கண் திறந்தது’ படக் கதாநாயகன் எஸ்.எம்.ராம நாதனோடு திருச்செந்தூர் கோயிலில் திருமணம். ஒரே ஒரு மகன் பூபதி!அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதல்வர்களோடு நடித்த பெருமை உடையவர்! அடிக்கடி ஆச்சியைச் சந்தித்தவர்கள் கமல், ரஜினி!கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் தமிழக அரசு கலைமாமணி விருதும் அளித்து தங்களைப் பெருமைப்படுத்திக்கொண்டுள்ளன!
மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை ‘சகோதரன்’ என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணே சன். இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, ‘அண்ணே’ என்றுதான் அழைத்தார் ஆச்சி!
காரில் செல்லும்போது, ‘மெள்ளப் போ, மெள்ளப் போ’ என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண் டும் என்பதில் குறியாக இருப்பார்! பின்னணிப் பாடகிகள் அளவுக்கு இனிய சாரீரம். இவரை அடிக்கடி பாடச் சொல்பவர்களிடம் கூச்சப்பட்டுக்கொண்டே, “என்ன பெரிசா பாடுறேன். பி.சுசீலா அம்மா குரலா என்னுது” என்பார்! ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. ஆச்சிக்கே பிடித்தது ‘சின்னக் கவுண்டர்’, ‘நடிகன்’. “ஒரு துளி விரசம் இல்லாமல் ‘நடிகன்’ படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்” என்பார்! பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் ஆழ்ந்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை! மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.
அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டியவர்!’ஆச்சி இன்டர்நேஷனல்’, ‘அல்லி ராஜ்யம்’, ‘காட்டுப்பட்டிச் சத்திரம்’ என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்! ‘வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா’ என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here