காரைக்குடி நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் குளங்களில் கழிவுநீர் சங்கமம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

0
653

காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரிக்க தவறியதால் நீர்நிலைகள் வறண்டு போயும், கழிவுநீர் சங்கமமாகும் இடங்களாக காட்சியளிக்கின்றன. காரைக்குடியில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பெருமைவாய்ந்த வீடுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்ட தெருக்கள் உள்ளன. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் மற்றும் அதனை ஒட்டி குளம், 4 வீதி சந்திக்கும் பகுதியில் குளம் மற்றும் கோவிலில் இருந்து வெளியேறும் நீர் அருகே உள்ள குளத்தில் விழும்படியும், மழைநேரங்களில் கழிவுநீர் ஓடைகளில் நீர் சென்றுவிடாமல் குளத்திற்கு நீர்வரும் படி அமைப்பு என மிகவும் நேர்த்தியாகவும் வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் நீர் அதிகமானால் அந்தநீர் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தூம்பு வழியாக வெளியேறி நகரின் வெளியே இருக்கும் கண்மாய்க்கு சென்றடையும். இதன்மூலம் விவசாய காலங்களில் தண்ணீர் கஷ்டம் என்பது வரவாய்ப்பில்லாத நிலை இருந்தது.

இதுபோன்று மழைநீர் சேகரிப்பிலும், வடிமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குளங்கள், கண்மாய்கள் தற்பொழுது போதிய பரமரிப்பு இன்றியும், ஆக்கிரமிப்பாலும் கழிவுநீர் குட்டைகளாக மாறிவருகிறது. இப்பகுதியில் பருப்பூரணி, நெல்லிக்காய் ஊரணி, நரியன்செட்டி ஊரணி, கீழஊரணி என 50க்கும் மேற்பட்ட குளங்களும், வீரையன்கண்மாய், அதலகண்மாய், காரைக்குடி கண்மாய் என பல்வேறு கண்மாய்களும் உள்ளன. ஒருசில குளங்கள் தனியார் பராமரிப்பில் உள்ளதால் முள்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. மற்ற குளங்கள் மற்றும் கண்மாய்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி போய் கிடக்கிறது. குளங்களை தூர்வாராமல் மண்மேடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் உள்ளே வர மற்றும் வெளியேற உள்ள அமைப்புகள் ஆக்கிரமிப்பால் அடைபட்டு கிடக்கின்றன. இதனால் குளத்தில் சேகரமாகும் நீர் கழிவுநீராக மாறி ஒருவித துர்நாற்றம் வீசி வருகிறது. தவிர ஒருசில பகுதிகளில் கழிவுநீரை குளங்களில் விட்டுள்ளனர். தேனாறு மற்றும் காரைக்குடி கண்மாய்க்கு செல்லும் வரத்துகால்வாய்களில் ஆகாயதாமரை, கோரை உட்பட பல்வேறு செடிகள் மண்டிப்போய் உள்ளது. இதேநிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்.

எனவே நகராட்சி நிர்வாகம் நீர்நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திமுக நிர்வாகி சக்தி கூறுகையில்,   ‘‘காரைக்குடி பகுதியை பொறுத்தவரை மிகவும் தெண்மைவாய்ந்த பகுதி. இங்குள்ள நகரமைப்பு வேறுபகுதிகளில் பார்க்கமுடியாது. இப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை வராது என்பதாலேயே வெளியூரில் இருந்து இங்குவந்து வீடுகட்டி குடியேறுகின்றனர். இங்குள்ள பழைய வீடுகளில் கிணறு மட்டுமே இருக்கும். வீடுகளில் போர்போடுவது கிடையாது. ஆனால் தற்போது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு, குளங்கள் போதிய பராமரிப்பின்மை உட்பட பல்வேறு காரணங்களால் குளங்கள் வறண்டுபோய் உள்ளது. இதனால் வீடுகளில் உள்ள கிணறும் வற்றி வருகிறது. புதர்மண்டி கிடப்பதால் குளங்கள், கண்மாய்கள் கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகிறது. நகரில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here