காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், ‘ஸ்கைப்’ மூலம் பாடம் என தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் இயங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. கடந்த 1943ல் துவங்கப்பட்ட இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தனியார் பள்ளிகள் மீது உள்ள மோகத்தால் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. கடந்த ஆண்டு வெறும் 229 மாணவர்கள் மட்டுமே படித்தனர்.இந்த நிலையை மாற்ற நினைத்த பள்ளி நிர்வாகம், வசதிகளை அதிகரிக்க ஸ்பான்சர் பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது. இதில் கிடைத்த நிதியின் மூலம், தனியார் பள்ளிகளை போலவே ஸ்மார்ட் கிளாஸ், விளையாட்டு உபகரணங்கள் என பல வசதிகளை செய்தனர். மாணவர்களுக்கு 45 நிமிடம் ஆங்கில எழுத்து உச்சரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பங்களிப்புடன் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அழைத்து வருகின்றனர்.
கலிபோர்னியாவில் இருந்து லட்சுமி பழனியப்பன் என்பவர் ‘ஸ்கைப்’ மூலம் வாரம் ஒருநாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாடம் மற்றும் தன்னம்பிக்கையை உயர்த்தும் பயிற்சி அளிக்கிறார். இந்த அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு மட்டும் 148 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 77 பேர் தனியார் பள்ளியில் இருந்து வந்துள்ளனர். பள்ளி செயலாளர் சிதம்பரம் கூறுகையில், ‘‘பெற்றோர் என்ன வசதிகள் வேண்டும் என எதிர்பார்த்தார்களோ, அதனை ஸ்பான்சர் பெற்று செய்துள்ளோம். இதன் பயனாக மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் ஆயிரம் மாணவர்களை சேர்ப்பதே இலக்கு,’’ என்றார்.