காரைக்குடி அருகே தைல மரம் நட எதிர்ப்பு! – போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

0
2880

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இதிலிருந்த முந்திரி மரங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக யூக்கலிப்டஸ் தைல மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், தங்கள் கிராமங்களில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாகவயல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இதற்குப் பதிலாக பிற மரங்களை நட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, யூக்கலிப்டஸ் மரக்கன்றுகள் நட இருந்த  நிலத்துக்கு அருகே அமர்ந்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ‘மான், குரங்கு இனங்கள் அடர்ந்த காடுகள் இல்லாததால், அவைகளுக்கு உணவு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மான், குரங்குகள் காடுகளை விட்டு கிராமங்களுக்கும், சாலை ஓரங்களிலும் ஓடிவந்து கார், பஸ்களில் அடிபட்டு இறந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது’ என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நடவில்லை என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்துசென்றனர். மேலும், வனத்தோட்டக் கழகத்தால் விளைவிக்கப்படும் தைல மரங்கள், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்படுவதால், அனைத்தையும் அழித்துவிட்டு பயன்தரும் மரங்களை நடவுசெய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here