காரைக்குடியில் பிரமுகர்களின் வாசல்வரை பயணிக்கும் தார்ச்சாலைகள்!

0
990

“மழைத் தண்ணீர் செல்வதற்கான வழியே இல்லாது போய்விடும். அதிகாரம் உள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் சாலை அமைத்துக்கொள்ளலாமா? அடுத்தடுத்த சாலைகளிலும் இதுபோன்று நடந்தால் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்”.

காரைக்குடி நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம், 2016-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள் 112.5 கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு, 2018 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகச் சென்னையைச் சேர்ந்த சுப்பையா கன்ஸ்ட்ரக்‌ஷன், அதற்கான டெண்டர் உரிமையைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தேவகோட்டை ரஸ்தா அருகே அமையவிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்த வழக்கு நிறைவுபெறும்வரை பணிகள் கிடப்பில்போடப்பட்டன. 2018 மே 7-ம் தேதிமுதல் மீண்டும் பணிகள் தொடங்கின. இடையில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்சான்டு மணலைப் பயன்படுத்தியது, மணலை அனுமதி கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து பெற்று வெளியே விற்பனை செய்யப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும், மழைக்காலங்களில் தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் அவதியுற்றனர். மிதவேகமாகச் சாலைப் பணிகள் நடைபெறுவதால் அன்றாட பணிகளுக்குச் செல்லும் மக்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அடிப்படையிலேயே செம்மண் நிலப்பகுதி என்பதால், சாலைப் பணிகளால் நகரமே புழுதிமயமாகக் காணப்படுவதால் சூழலியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்தச் சூழலில் தற்போது காரைக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கும் ரயில்வே நிலையத்துக்கும் இடையேயான 100 அடி சாலை அமைக்கும் வேலைகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ளன. இந்தச் சாலையில் அமைந்திருக்கும் பி.ஜே.பி. பிரமுகர் இலுப்பைக்குடி நாராயணன் வீட்டுக்கும், சாந்தி ரோடுவேஸ் சரவணன் அலுவலகத்துக்கும், ஹோட்டல் சரவண பவனுக்கும் அவர்களுடைய வாசல்வரை கிளைச்சாலைகள் அமைத்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கிளைச் சாலைகள் அமைத்ததற்கு அப்பகுதி மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் நம்மிடம், “பொதுச் சாலைகளை அலுவலகத்தின், வீட்டின் வாசல்வரை நீட்டித்துக்கொள்ள முறையான அனுமதி நகராட்சியிடம் பெற வேண்டியதில்லையா; கிட்டத்தட்ட இந்தச் சாலையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் அமைந்திருக்கின்றன. எல்லோரும் தங்கள் வாசல்வரை கிளைச் சாலைகள் அமைக்கக் கோரினால் நகராட்சி அனுமதி அளிக்குமா;  சாலைகள், பாதையை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டால் பாதசாரிகள் பாதிக்கப்படமாட்டார்களா; பொதுமக்களின் வரிப்பணம்மூலம் பெறப்படுகிற சாலையின் இடுபொருள்கள் இவ்வாறு வீணடிக்கப்படலாமா; இதற்கான பொறுப்பை ஒப்பந்தக்காரர் மற்றும் நகராட்சி நிர்வாகம் உணரவில்லையா;  காரைக்குடி முழுவதும் தோண்டப்பட்டிருக்கிற எத்தனையோ சாலைகள் இன்னும் முடிவு பெறாமல், மக்கள் குண்டும் குழியிலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது கிளைச் சாலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையா; அரசு, பொது மக்களுக்காக இயங்குகிறதா, இல்லை குறிப்பிட்ட பிரமுகர்களின் நலனுக்காக இயங்குகிறதா” என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரும் மக்கள் மன்றத் தலைவருமான ராஜ்குமார், “மழைத் தண்ணீர் செல்வதற்கான வழியே இல்லாது போய்விடும். அதிகாரம் உள்ளவர்கள் எங்கு வேண்டுமானாலும் சாலை அமைத்துக்கொள்ளலாமா? அடுத்தடுத்த சாலைகளிலும் இதுபோன்று நடந்தால் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

அ.ம.மு.க. நகரச் செயலாளரும், சாந்தி ரோடுவேஸ் உரிமையாளருமான  சரவணன், “மழை பெய்ததால் அலுவலகம் முன்பு, பள்ளமாக இருந்தது. கான்ராக்டரிடம் பேசி சொந்த செலவில்தான் சாலை அமைத்திருக்கிறோம். அதற்கான அனுமதி யாரிடமும் பெறவில்லை” என்றார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாளிடம் விவரம் கேட்டோம். ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஒப்பந்தக்காரர் பரந்தமனதுக்காரர்போல. அதனால்தான் கேட்டவர்களுக்கு எல்லாம் சாலை போட்டுக் கொடுத்திருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here