காரைக்குடியில் ஊருணியை தூர்வாரிய ஊர்மக்கள் : நகராட்சி கைவிட்டதால் களத்தில் இறங்கினர்

0
1353

காரைக்குடி நகராட்சி நிர்வாகம் ஊருணியை தூர்வார முன்வராததால், ஊர்பொதுமக்கள் நமக்கு நாமே என களத்தில் இறங்கி, ஊருணியை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், செஞ்சை பாப்பா ஊருணி உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊருணியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் தேங்கியது. வரத்துக் கால்வாய்கள் தூர்ந்தநிலையில், நீர்வரத்தின்றி ஊருணி வறண்டது. இதனை தூர்வார கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் காரைக்குடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது மழையால் ஊருணியில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ஊருணியை தூர்வாருவதற்கு ஊர் பொதுமக்கள் களத்தில் இறங்கினர். நேற்று காலை ஜேசிபி இயந்திரங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊருணியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து ராமச்சந்திரன் என்பவர் கூறுகையில், ‘இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பாப்பா ஊருணியில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் தேங்கியது. இதன் மூலம் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது போதிய மழை இல்லாதமலும், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்ந்ததாலும், ஊருணி வறண்டது. ஊருணியில் தண்ணீர் இல்லாததால் பல குடும்பத்தினர் இப்பகுதியை விட்டு வெளியேறினர். இந்நிலையில், மழையால் ஊருணியில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த ஊருணியை தூர்வார காரைக்குடி நகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கிராம மக்கள் குழு அமைத்து சொந்த செலவில் தூர்வாரிக் கொண்டிருக்கிறோம். நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைத்து மழைநீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனால், நிலத்தடி நீர் உயர்ந்து வீடுகளுக்கு பயன்படும். தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவு செய்துள்ளோம். அரசாங்கம் இதுபோல, காரைக்குடியில் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி மழை காலங்களில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here