காய்கறிகள்… எண்ணெய்… அரிசி… பால்… அனைத்தும் கிடைக்கும் 5 ஏக்கர் தோட்டம்!

0
2262

‘நமது வேளாண் உற்பத்தி முறை, இயற்கையைச் சார்ந்தது. இயற்கை வழியில் அமைந்தது. பெரும்பாலான விவசாயிகளுக்குத் தங்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள் பிற பொருள்களை விளைய வைக்கக்கூடிய அளவுக்கு நிலம் இருந்தது. காளைகள், பசுக்கள், ஆடுகள், கோழிகள் வைத்திருந்தனர்.

வேளாண்மைக்குத் தேவையான விதைகளைத் தங்களது நிலத்திலிருந்து சேகரித்து வைத்தார்கள். ஆடு, மாடுகளின் கழிவுகளை உரமாக மாற்றிக்கொண்டார்கள். காட்டோரங்களில், பொது இடங்களில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளைத் திரட்டிப் பசுந்தாள் உரம் தயாரித்தார்கள். இதனால் எந்தப் பொருளுக்கும் யாரையும் சார்ந்திருக்காத தற்சார்பு நிலை இருந்தது. இந்த நிலைதான் விவசாயிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நிலை’ என்று குறிப்பிட்டுள்ளார் கிராமிய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா.

இதே விஷயங்களைக் கடைப்பிடித்து வரும் விவசாயிகள் இன்றும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி. இவர் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான பெரும்பாலான பொருள்களைத் தங்கள் நிலத்திலே இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்து கொள்கிறார். அதோடு, கால்நடைக் கழிவுகளிலிருந்து பஞ்சகவ்யா, மண்புழு உரம் எனத் தயாரித்து விற்பனை செய்தும் வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலூகா, அரளிக்கோட்டை கிராமத்தில்தான் சீதாலட்சுமியின் நிலம் இருக்கிறது. ஒரு மாலை நேரத்தில் தோட்டத்தில் இருந்த சீதாலட்சுமியைச் சந்தித்தோம். மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேச ஆரம்பித்தார் சீதாலட்சுமி.

“விவசாயக் குடும்பத்துல பிறந்ததால சின்ன வயசுலயிருந்தே விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். கல்யாணமாகி வந்த பிறகும் விவசாயத்தை விடலை. என் கணவரும் விவசாயத்துல ரொம்ப ஆர்வமுள்ளவர். முன்னாடி, வீட்டுப் பெரியவங்களோட சேர்ந்து விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். இப்போ பத்து வருஷமா நானும் என் கணவரும் சேர்ந்து விவசாயம் பார்க்குறோம். எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவர் சென்னையில ஒரு தனியார் கம்பெனியில் வேலை பாக்குறாரு. சின்னவர் வக்கீலுக்குப் படிச்சிட்டு இருக்காரு. தோட்டத்துல பெரும்பாலான வேலைகளை நாங்க ரெண்டு பேருமே செஞ்சுடுவோம். ஒரு சில வேலைக்கு மட்டும்தான் ஆளுங்களை வெச்சிக்குவோம்.

பெரியவங்க இருந்தவரைக்கும் இலைதழைகளைப் போட்டு பாரம்பர்ய முறையிலதான் விவசாயம் செஞ்சாங்க. நாங்களும் அதையேதான் கடைப்பிடிச்சுட்டுருக்கோம். இலைதழைகள், தொழுவுரம்னு போட்டுதான் நெல் சாகுபடி செய்வோம். ஒருமுறை காரைக்குடிக்கு வந்த நம்மாழ்வார் ஐயாவைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஒரு தனியார் பண்ணையில மூணு நாள் தங்கியிருந்து அவர் பயிற்சி கொடுத்தாரு. நானும் அதுல கலந்துகிட்டேன். அதுக்கப்புறம் முழுமையா இயற்கை விவசாயம் செய்றோம். இயற்கை விவசாயம்னு சொல்றதை விடத் ‘தற்சார்பு விவசாயம்’ங்கிறது பொருத்தமா இருக்கும். இயற்கை விவசாய முறைகள்ல எனக்கு வந்த சந்தேகங்களைத் தீர்த்து வெச்சது, குன்றக்குடி கே.வி.கேதான். இப்போ வரைக்கும் எங்களுக்கு ஆலோசனை கொடுத்துட்டு இருக்காங்க” என்ற சீதாலட்சுமி நிலத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இது மொத்தம் அஞ்சு ஏக்கர். கிணத்துப் பாசனம்தான் இருக்கு. நெல் சாகுபடிதான் பிரதானம். ஒரு ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. தேங்காயை விற்பனை செய்றதில்லை. எண்ணெய் ஆட்டி வீட்டுத் தேவைக்கு வெச்சுக்குவோம். வீட்டுத்தேவை போக மீதமுள்ளதை உறவுக்காரங்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்துடுவோம். பிண்ணாக்கை மாட்டுக்குக் கொடுத்திடுவோம். வருஷத்துக்கு ஒரு தடவை 50 சென்ட்ல நிலக்கடலையும், 50 சென்ட்ல எள்ளும் போடுவோம். இதுவும் வீட்டுத்தேவைக்குத்தான். எண்ணெயைச் சமையலுக்கும், பிண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவோம். இதுபோக, கொஞ்ச இடத்துல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் போட்டுருக்கோம். அஞ்சு சென்ட் நிலத்துல வாழை இருக்கு. மீதி நிலம் முழுக்க நெல் விவசாயம்தான்.

போன வருஷம் மழை சரியா கிடைக்கலை. அதனால, ரெண்டு ஏக்கர் நிலத்துல மட்டும்தான் நெல் சாகுபடி பண்ணினோம். ஒரு ஏக்கர் நிலத்துல ஆத்தூர் கிச்சலிச்சம்பாவும், ஒரு ஏக்கர் நிலத்துல சீரகச்சம்பாவும் போட்டோம். கிச்சலிச்சம்பா ரகத்துல 32 மூட்டை (60 கிலோ) நெல் கிடைச்சது. சீரகச்சம்பா ரகத்துல 22 மூட்டை நெல் கிடைச்சது. நெல்லை அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்றோம். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். தவிடு, வைக்கோல் மாடுகளுக்கு ஆகிடும். இப்போ, 70 சென்ட் நிலத்துல ஒற்றை நாற்று முறையில குள்ளக்கார் ரக நெல் இருக்கு. இன்னும் இருபது நாள்ல அறுவடைக்கு வந்திடும்” என்ற சீதாலட்சுமி நிறைவாக,

“எங்களைப் பொறுத்தவரைக்கும் எதுக்காகவும் யாரையும் எதிர்பார்த்து நிக்கறதில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் இந்த மண் மாதா கொடுத்திடுறா. கைச்செலவுக்குத் தேவையான வருமானத்தை மாடுங்க கொடுத்துடுது. மண்புழு உரம், பஞ்சகவ்யா மூலம் மாசம் முப்பதாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. நெல் மூலமா வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. திட்டமிட்டு விவசாயம் செஞ்சா, விவசாயத்தைவிட லாபமான தொழில் எதுவும் கிடையாது” என்று சொல்லியபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சீதாலட்சுமி, செல்போன் :
80567 50448

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here