நகரத்தார்களின் அரசர்’ என்று அழைக்கப்படுகின்ற, இராஜா சர் எம்.ஏ.எம். இராமசாமி அவரது இல்லத்தை, நகரத்தார்கள் அரண்மனை என்றுதான் அழைக்கின்றார்கள்.வைகோ அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தை, இந்த வீட்டில் எடுப்பதற்கு இராஜா அவர்கள் அனுமதி அளித்தார்கள். அந்தப் படத்தில், இந்த வீட்டின் உள் அமைப்பை நீங்கள் பார்க்கலாம். அதற்குப் பிறகு, பல படங்களில், இந்த அரண்மனை இடம் பெற்று உள்ளது. ஜீன்ஸ் (கானாடுகாத்தான், பள்ளத்தூர்), சின்ன ஜமீன், ராஜகுமாரன், அரண்மனைக் கிளி, சாமி, சிங்கம், பெரியார், தவமாய் தவமிருந்து, வேங்கை, திருப்பதி ஆகிய படங்களில் செட்டிநாட்டு வீடுகளில் காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். இன்றைய இளம் இயக்குநர்கள் பலர், செட்டிநாட்டு வீடுகளில் படம் பிடிப்பதை விரும்புகின்றார்கள். பிரிவோம் சந்திப்போம் திரைப்படம், பெரும்பகுதி கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில்தான் படமாக்கப்பட்டு உள்ளது.
கானாடுகாத்தான் அரண்மனையில், நடு முற்றத்தைச் சுற்றிலும் உள்ள மேற்கூரையில், நான்கரை லட்சம் குறு ஓடுகள் பதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு இடையில் மழைநீர் ஒழுகல் ஏற்பட்டதால், அத்தனை ஓடுகளையும் அகற்றிவிட்டு, உடைந்து போன சுமார் ஒரு இலட்சம் ஓடுகளைப் புதுப்பித்து, மீண்டும் பொருத்தி இருக்கிறார்கள். இந்தப் பணிகள் நிறைவுபெற ஆறு மாதங்களும், 35 லட்ச ரூபாய் செலவும் ஆயிற்றாம். ஓடு மாற்றவே இவ்வளவு செலவு என்றால், ஒட்டுமொத்தமாக இந்த வீட்டைப் பராமரிப்பதற்கு எவ்வளவு ஆகும்? என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். செட்டிநாடு வீடுகளுக்கான ஓடுகளைத் தயாரிப்பதற்காகவே, இந்தப் பகுதியில் சூளைகள் இயங்கி வருகின்றன.
இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும், எத்தனை கோடிகளை வாரி இறைத்தாலும் இதைப் போன்ற கட்டிடக்கலை வாய்க்கப் பெறாது என்பது மறுக்க முடியாத உண்மை!