காணும் இடமெல்லாம் கல்வெட்டு

0
1038

சிவகங்கை அருகே காணும் இடமெல்லாம் கல்வெட்டுகளால் சூழப்பட்ட திருமலையில் உள்ள பல்லவர் கால குடவறை கோயில் காண்போரை கவர்கிறது. சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது திருமலை. சுமார் 200 அடி உயர மலையின் மீது, கிபி 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவறை கோயில், கிபி 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. பாறையை குடைந்து கட்டப்பட்ட குடவறை கோயிலின் உள்ளே, சிவனும், மீனாட்சியும் திருமணக்கோலத்தில் சிலையாக உள்ளனர். மலைக்கொழுந்தீஸ்வரர் சாய்ந்த லிங்க வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளார். அதற்கு வலதுபுறம் பாகம்பிரியாள் அம்மன் காட்சி தருகிறார். கோயில் தோன்றிய காலத்தில் கருவவீரபாண்டியன் இக்கோயிலை காத்து வந்ததாக கூறுகின்றனர். அவர் சிலையும் இங்குள்ளது. மலையின் முன்பகுதியை வெகுதூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளை மாடு களைத்து படுத்திருப்பது போல் பாறையமைப்பு காணப்படுகிறது.

அதற்கு மேல் கோயில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி வற்றாத 8 நீர்ச்சுனைகள் உள்ளன. மலையின் தென்பகுதி அகத்தியர் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகிறது. மலையில் உள்ள பாறைகளில் மூலிகைச்சாயங்களால் வரையப்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு புகைப்பட கண்காட்சியில், இந்த ஓவியங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த ஓவியங்களில் ஒன்றாக எகிப்திய கடவுள்களில் விண்ணரசனாக கருதப்படும், ‘ஹோரஸ்’ எனும் கழுகு கழுத்துள்ள உருவம் உள்ளது. இவை சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக்கருதப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் மல்லப்பாடி, தென் ஆற்காடு ஆலம்பாடி, கீழ்வாலை, பாடியேந்தல், செத்தவரை, வட ஆற்காடு சென்னராயன்பள்ளி, கோவை வேட்டைக்காரன்மலை, நீலகிரி கோவோனக்கரை, திண்டுக்கல் சிறுமலையில் மட்டுமே குகை, பாறை ஓவியங்கள் உள்ளன. சிவகங்கை திருமலை குகை ஓவியங்கள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை.

‘கல்வெட்டு புதையல்’’ என அழைக்கும் வகையில் கோயில் பிரகாரங்கள், தூண்கள், படிகள், கற்சுவர்கள் என எங்கு திரும்பினாலும் மலைகளில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கு வரலாற்றிற்கு முற்பட்ட மனித நாகரீக தடயங்களில் இருந்து, 14ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுக்கள் வரை உள்ளன. பெருங்கற்காலத்தினரின் (சங்க காலம்) குகை ஓவியம், முதுமக்கள் தாழி, சமணர் கால கற்படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், 8ம் நூற்றாண்டு குடவறை கோயில், 12, 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களின் மூலம் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.இக்குகை நெற்றியில் உள்ள தமிழ் பிராமி எழுத்துக்களில் இருந்து, சமணர்கள் இங்கு தங்கி சென்றதற்கான சுவடுகளை அறியலாம். குகைகளில் சமணர்களின் படுக்கை போன்ற 8 அமைப்புகள் இங்கு உள்ளன.

ஒரு குகையில் 17 தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. பொதுவாக தமிழகத்தில் கண்டறியப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகளின் காலம் கிமு 3ம் நூற்றாண்டாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால் திருமலையில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், கிமு 2ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழர் வரலாற்றின் பொக்கிஷமாக கருதப்படும் திருமலையை வெகுதாமதத்திற்கு பிறகே தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு சார்பிலான ஆய்வுகள் தொடங்கப்படவில்லை. சில ஆண்டுகளாக திருவண்ணாமலை போல, திருமலையில் நடக்கும் கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு தொல்லியல் ஆய்வுகள், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here