மார்ச் 20, 1942-ல் சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் சுப்பையா சேர்வை – குஞ்சரம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் முத்துலிங்கம். சிவகங்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்தார்.1966 முதல் 1972 வரை முரசொலியில் துணையாசிரியராகவும், 1972 முதல் 1975 வரை அலை ஓசையில் துணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அவர் எழுதிய முதல் பாடல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்துக்காக. படத்தின் இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷ். இதில் வெங்கடேஷுக்கு உதவியாளராக இருந்தவர்தான் இளையராஜா. ஆண்டு 1973. 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெரும்பாலும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
எம்ஜிஆர் மீது இன்றுவரை மாறாத விசுவாசம், பாசத்துடன் இருப்பவர் முத்துலிங்கம். முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என கவிஞரை உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர்.இசைஞானி இளையராஜாவுக்கு முதன் முதலில் பாட்டெழுதிய கவிஞர் என்ற பெருமையும் முத்துலிங்கத்துக்கு உண்டு. கவிஞர் முத்துலிங்கம் தோற்றத்தில் எளியவராக இருந்தாலும், அனுபவத்தில் திரையுலகில் இன்றைக்கு அவருக்கு இணையானவர்கள் வெகு சிலர்தான். அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களுக்கு சொந்தக்காரர். அதை எந்தவித ஒப்பனையுமின்றி அவர் எளிமையாக சொல்வதைக் கேட்பதே பரவசமாக இருக்கும்.
விருதுகள்
தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கானவிருது (1978-79), கலைமாமணி விருது (1981), பாவேந்தர் பாரதிதாசன் விருது (1981), கலைத்துறை வித்தகர் விருது (1991), கபிலர் விருது (2013) பெற்றுள்ளார். 2006-ல் தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்றார். 2013-ல் கண்ணதாசன் விருது, 2008-ல் வாலி விருது, சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் கவுரவ டாக்டர் படம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
கவிஞர் முத்துலிங்கம் இதுவரை எழுதிய புத்தகங்கள்…
1. வெண்ணிலா (பாரதிதாசன் முன்னுரையுடன் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதி) வெளிவந்த ஆண்டு 1961. 2. எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் 3. எம்.ஜி.ஆர். உலா 4. எம்.ஜி.ஆர். அந்தாதி 5. முத்துலிங்கம் கவிதைகள் 6. என் பாடல்கள் சில பார்வைகள் (கட்டுரை) 7. காற்றில் விதைத்த கருத்து (கட்டுரை – இதற்குத்தான் தினத்தந்தி ஆதித்தனார் விருது கிடைத்தது) 8. பாடல் பிறந்த கதை (கட்டுரை) 9. உலாப் போகும் ஓடங்கள் (கவியரங்கக் கவிதைகள்) 10. திரை இசைப் பாடல்கள் (இரண்டு தொகுதி) 11. முத்துலிங்கம் திரைப்பாடல் முத்துக்கள் 12. பூகம்ப விதைகள் (கவிதைகள்)