காரைக்குடியைப் பூர்விகமாகக் கொண்ட இயக்குனர் கரு.பழனியப்பன்

0
1527
தொன்மையும், கலாச்சாரப் பெருமையும் மிகுந்த காரைக்குடியைப் பூர்விகமாகக் கொண்டவர் இயக்குனர் கரு.பழனியப்பன் தமிழில் தடம் பதித்த இயக்குனர்களில் ஒருவர்.இவருடைய தந்தை திரு பழ. சின்ன கருப்பையா, தாயார் திருமதி நாகம்மை. இவர்களின் மூன்று குழந்தைகல் மூத்தவர் கரு.பழனியப்பன்.பழனியப்பனுக்குப் புத்தகங்களின் மீதான ஈர்ப்பு பள்ளிப் பருவத்திலேயே துவங்கி விட்டது. வணிகம் தான் வாழ்க்கை என்றாலும் பழனியப்பனின் தந்தை தீவிர வாசகர். வெறுமனே நாளிதழ்கள், வார இதழ்கள் என்றில்லாமல் பழந்தமிழ் இலக்கியத்தில் துவங்கி, அன்றைய தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களான கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் என்று சகல எழுத்தாளர்களையும் வாசித்தவர். தந்தையின் புத்தகப் பிரியம் மகனுக்கும் தொற்றி விட சிறு வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டார் பழனியப்பன்.
மேடையில், சட்டென ஏதோ ஒரு புள்ளியில் இருந்து பேச்சைத் துவங்குவது, துவங்கிய நிமிடத்திலேயே பார்வையாளர்களைத் தன் வசம் ஈர்த்து விடுவது, நிமிடத்திற்கு நிமிடம் பார்வையாளர்களைக் கைதட்ட வைப்பது என அவர் கொண்டிருந்த பாணி பள்ளி கல்லூரி நாட்களில் அவருக்கு நிறைய சான்றிதழ்களையும் கோப்பைகளையும் பெற்றுத் தந்தது.கரு.பழனியப்பன் மதுரை செவன்த்டே யில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு பி.ஏ ஆங்கிலம். ஆங்கில இலக்கியத்திற்குப்பெயர் பெற்ற, மதுரை அமெரிக்கன் கல்லூரியில்.தொடர்ந்து எம். ஏ ஆங்கில இலக்கியம் மதுரையின் மற்றொரு புகழ் பெற்ற தியாகராஜா கலைக் கல்லூரியில்.அவருடைய தீவிர தமிழ் இலக்கிய செயல்பாடு, அவரை ஆனந்த விகடனின் மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வு பெற வைத்தது.
பரவலாக, இயக்குனர் திரு பார்த்திபனின் உதவியாளர் என்று அறியப்பட்டாலும் பழனியப்பன் மூன்று வெவ்வேறு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.திரு பார்த்திபன் அவர்களிடம் புள்ளக்குட்டிக்காரன் மற்றும் ஹௌஸ்ஃபுல். இயக்குனர் திரு தரணி அவர்களிடம், ‘எதிரும் புதிருமி’ற்குப் பிறகும் ‘தில்’லுக்கு முன்னதுமான, படமாகாத கதைகளில் திரைக்கதை உருவாக்கும் குழுவிலும், இயக்குனர் திரு எழில் அவர்களிடம் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். தொடர்ந்த முயற்சியின் பயனாக 2002ல் கரு.பழனியப்பன் இயக்குனராகிறார். பார்த்திபன் கனவு என்று பெயர் சூட்டப்பட்ட, ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த, திரைப்படம் 2003ல் வெளி வந்து ஏகோபித்த வெற்றியை அடைந்தது.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நகைச் சுவை நடிகை, சிறந்த பாடகர் என தமிழக அரசின் ஏழு விருதுகளைப் பெற்றது பார்த்திபன் கனவு.

அதன் தொடர்ச்சியாக 2005 ல் சதுரங்கம் (இந்தப் படமும் தமிழக அரசின் சிறந்த கதைக்கான விருதைப் பெற்றது). 2006 ல் சிவப்பதிகாரம் 2008ல் பிரிவோம் சந்திப்போம் ( இந்தப் படம் நடிகை சினேகாவிற்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருதைப் பெற்றுத் தந்தது) 2010 ல் மந்திப்புன்னகை. மந்திரப்புன்னகையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் பரிணாமம் கொள்கிறார் பழனியப்பன்.

நீண்ட நாள் காதலித்த பியாவை மணந்து இனியா, தயா என்ற இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து, தன் படைப்புகளைக் காட்டிலும் இனிய குடும்பத்தை உருவாக்கிக் கொண்டார் இயக்குனர் பழனியப்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here