கண்மாய்களை தத்தெடுத்து மழை நீர் சேமிப்பு ; சிவகங்கையில் ஒரு முன்னோடி கிராமம்

0
7168

சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராம மக்கள் மழை நீரை நான்கு கண்மாய்களில் சேமித்து நீர் மேலாண்மையில் முன்னோடியாக விளங்குகின்றனர்.தமிழகத்தில் அணைகள் கட்டுவதற்கு முன்பு கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் முக்கிய நீராதாரமாக விளங்கின. குடிநீர், விவசாயம் என அனைத்துக்கும் நீர் நிலைகளையே மக்கள் நம்பி இருந்தனர். இவற்றிற்கு மழை நீரே முக்கிய நீராதாரமாக இருந்தன. கிராமம், சுற்றுப்புறங்களில் சேகரிக்கப்படும் மழை நீர் கண்மாய்களுக்கு நேரடியாக அடைய வரத்து கால்வாய்கள் அமைத்தனர். அதில் கழிவு நீர் கலந்து விடாமல் பார்த்து கொண்டனர். ‘கிராம ஊழியம்’ செய்ய தாமாக முன் வந்து நீர் நிலைகளை பராமரித்தனர். இதனால் மழை பெய்யும் போதும், கண்மாய் உபரி நீரை வெளியேற்றும் நுட்பங்கள் அத்துபடி. அதிக மழையால் கரைகள் உடையாமல் பார்த்து கொண்டனர்.

மாயமான கண்மாய்கள் : கண்மாய்களை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எப்போதாவது வரும் அதிகாரிகள் கண்மாய்களை பார்வையிட்டு பராமரிப்புக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு திட்டமிடுவர். ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை செய்வர். ‘கமிஷன்’ அடிப்படையில் பணிகள் நடப்பதால் கண்மாய் பராமரிப்பு பெயரளவு என்றானது. ‘பொதுப்பணித்துறை வரவு, நீர் நிலைகளுக்கு செலவு’ என்றானது. இலவச அரிசி, மதுக்கடைகள், விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம், விவசாயிகள் மாற்று தொழிலுக்கு மாறியது, பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கண்மாய்களால் பஞ்சம் பிழைக்க வழியின்றி இடம் பெயரும் விவசாயிகள் என பல்வேறு காரணங்களால் கண்மாய்கள் அழிந்து விட்டன.

வீணான நீர் நிலைகள் : கிராம மக்கள் பின்பற்றிய நீர் மேலாண்மை முடிவுக்கு வந்து விட்ட நிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வேப்பங்குளம் கிராம மக்கள் நீர் மேலாண்மை திட்டத்தை கையில் எடுத்தனர். இதன் பயன் நான்கு கண்மாய்களில் மழை நீர் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இங்கு 980 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 4,100 ஓட்டுகள் உள்ளன. இக்கிராமம் தென்னை, எலுமிச்சை விவசாயத்தில் முன்னோடியாக விளங்கியது. மேலக்கண்மாய், செட்டிக்கண்மாய், பேரிக்கண்மாய், சந்தனம் கண்மாய், பிடாரி கண்மாய், தென்மால் கண்மாய், அச்சாணி கண்மாய் ஆகியன முக்கிய நீராதாரமாக இருந்தன. வாணியம் தம்மம், கல்குளம் ஊரணிகளை குடிநீருக்கு பயன்படுத்தினர். இவற்றில் மழை நீர் சேமித்து குடிநீர், விவசாயத்திற்கு தடையின்றி பயன்படுத்தி வந்தனர். கண்மாய்களில் மழை நீரை சேமிக்க கிராம சபை கூட்டம் முடிவு செய்தது. தங்களால் இயன்ற நிதியை வழங்கினர். நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சேமிப்பானது. கண்மாய்களில் மண்டிக்கிடந்த கருவேல மரங்களை அகற்றினர். மழை நீர் வரத்து கால்வாய்களை பராமரித்தனர். சமீபத்தில் பெய்த மழையின் பயனாய் வேப்பங்குளம் கண்மாய்களில் மழை நீர் எட்டிப்பார்த்தது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் நான்கு கண்மாய்களிலும் பாதியளவு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

சபாஷ் கலெக்டர்! : சிவகங்கை முன்னாள் கலெக்டர் லதா, வேப்பங்குளம் மக்கள் பின்பற்றும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து பாராட்டினார். வேப்பங்குளம் கண்மாய்களுக்கு வரும் மடைகளை பராமரிக்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் நட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். சிவகங்கை கலெக்டராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஜெயகாந்தன் நீர் மேலாண்மை திட்டப் பணிகளை வேப்பங்குளம் மக்கள், விவசாயிகள் முன்னணியில் ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் : நீர் மேலாண்மையை மீண்டும் கையில் எடுத்தோம். இதற்காக முன்னோடி விவசாயிகள், மென்பொருள் பொறியாளர்கள் ஜெயக்குமார், உத்தம்குமார், வெங்டேஷ்குமார், விஜய் ஆகியோருடன் இணைந்து கண்மாயை முறைப்படி துார்வாரி மழை நீரை கொண்டு வந்தோம். ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் ஆந்திரா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது ‘தகவல் மற்றும் விவசாய செயல் மேலாண்மை மையம்’ அமைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு உதவினர். இத்திட்டத்தை வேப்பங்குளத்தில் செயல்படுத்த உள்ளோம்.

திருச்செல்வம் மென்பொருள், பொறியாளர் – ‘தண்ணீர் மனிதர்’ பாராட்டு

முன்னோர் கடைப்பிடித்த நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என்பதற்கு வேப்பங்குளம் உதாரணம். இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ என அழைக்கப்படும் ராஜேந்தர் சிங் கடந்த ஏப்.,9 ல் வேப்பங்குளம் வந்தார். இங்கு பின்பற்றப்படும் நீர் மேலாண்மை திட்டத்தை பாராட்டினார். நீர் மேலாண்மையை முன்பே கையில் எடுத்திருந்தால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். தற்போது சேகரித்த மழை நீர் முதல்முறையாக விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மடையை திறந்து விட்டுள்ளோம். இனி ஆண்டு தோறும் கண்மாய்களை பராமரித்து மழை நீரை சேமிப்போம்.

நாச்சியப்பன், விவசாயி ஒற்றுமையால் வெற்றி 

இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள குருந்தமபட்டு கிராமத்தின் அருகில் செல்லும் மணிமுத்தாறு கால்வாய் மூலம் மேலக்கண்மாய் பின்பகுதி வழியாக நீர் வரத்து இருந்தது. இக்கால்வாய் பராமரிக்கபடாமல் துார்ந்து விட்டது. இதனால் மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்தாலும் மேலக்கண்மாய்க்கு வராது. இதை துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தடுத்து மழை பெய்தால் கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டும். இது கிராம மக்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here