சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் நடக்கும் மத நல்லிணக்க மஞ்சுவிரட்டு

0
1349

கண்டிப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடக்கிறது,பார்க்க வாருங்கள் என்று காரைக்குடி நண்பர்களின் அன்பு அழைப்பை ஏற்று சென்றிருந்தோம்.இப்படி ஒரு நிகழ்வை இது வரை நாங்கள் கண்டதில்லை என்றே சொல்லலாம்.ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற பண்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அங்கிருந்து திரும்பும்போது எங்கள் மனம் ஏங்கியது..அப்படி ஒரு அசத்தலான திருவிழா.அங்கு அமைந்துள்ள புனித பழைய அந்தோணியார் கோவிலின் சார்பில் மஞ்சுவிரட்டு ஒவ்வொரு வருடமும் தை ஐந்தாம் தியதி நடத்தப்படும் என்று சொன்னார்கள்.இந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக ஏற்கனவே ஒரு முறை மஞ்சுவிரட்டு திருவிழா நடத்தப்பட்டு இருந்தாலும், மிக விமர்சையாக மீண்டும் நடத்தப்பட்டது.

ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது.வாழை இலை,மாவிலை தோரணங்கள்.வண்ண விளக்குகள்,ஒலிபெருக்கியில் பாடல்கள் என்று அசத்தினார்கள்.மஞ்சுவிரட்டுமிரட்டலாக நடை பெற்று முடிந்தது ஊருக்கு கிளம்பலாம் என்று கிளம்பிக்கொண்டு இருந்தோம் எங்கிருந்தோ ஒரு பாட்டி வந்து கையை பிடித்து இழுத்து சாப்பிடாமல் போகக்கூடாது என்று பாசமழை பொழிந்தார்.அவர் இல்லம் சென்ற பிறகுதான் வியப்பின் உச்சம் அடைந்தோம்.பத்திரிக்கையாளர்கள்,காவல்துறையினர்,மற்று அரசு அதிகாரிகள்,மஞ்சுவிரட்டை காண வந்த மற்ற ஊர்காரர்கள் என்று ஒருவரை அவர்கள் விடவில்லை.ஒவ்வொரு இல்லத்திலும் மதிய உணவு பரிமாறப்பட்டது.யாரும் சாப்பிடாமல் போகக்கூடாது என்று ஒலிபெருக்கி வாயிலாக ஒரு பெண்மணி அன்பு கட்டளை இட்டுக்கொண்டு இருந்தார்!அவர்களின் அன்பினில் எங்கள் கண்கள் குளமானது.நன்றி என்று ஒரு வார்த்தை சொல்லி அந்த உறவுகளுக்கு நாம் கைமாறு செய்ய முடியாது.அந்த ஊரில் மதம் என்றோ ஜாதி என்றோ யாரையும் பிரித்து பார்க்க எங்களால் முடியவில்லை.எல்லா இல்லங்களிலும் திருவிழா கோலம்தான்.நம்மை போட்டி போட்டுகொண்டு உபசரிப்பதில்தான் அந்த குடும்பத்தினர் அனைவரின் கவனமும் இருந்தது.சாப்பிட்ட இலையை நாம் எடுத்து விடலாம் என்று முயன்ற போது,தடுத்து விட்டார்கள்.காரணம் கேட்ட போது, வந்திருக்கும் விருந்தாளி இலையை அப்புறப்படுத்தினால் அந்த உறவு நீடிக்காதாம் என்று காரணம் சொன்னார்கள்.
அந்த பாட்டியின் வீட்டில் கூடிய விரைவில் ஒரு திருமணம் நடக்க இருக்கிறதாம்.பத்திரிக்கை அனுப்புவோம்,கண்டிப்பா வந்திரனும்னு பாசமா சொன்னார்கள்.எங்கள் வயிற்றை மற்றும் அல்ல மனதையும் நிறைத்த அந்த குடும்பம் பல்லாண்டு காலம் எல்லா சுகங்களும் பெற்று வாழ வேண்டும் இறைவா ! என்று பிரார்த்தித்துக்கொண்டு,அன்னாரது ஆசியையும் பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இது போன்ற மத நல்லிணக்கத்தை நம் ஊரிலும் கொண்டு வர முயல வேண்டும் என்ற படிப்பினயோடு கனத்த இதயத்துடன் அங்கிருந்து பயணமானோம். இது போன்ற உயர்ந்த பாரம்பரியங்கள் எங்கு காணப்பட்டாலும் அது பின்பற்றப்பட வேண்டும் ! வாழ்க அவர்கள் பண்பு !!

நன்றி திருநெல்வேலி வள்ளியூர் முத்துகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here