மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது

0
598

63 வயதான மீனாட்சி கேசவன் திறன்வாய்ந்த கடம் தயாரிப்பாளர். தற்போது இவரும் இவரின் குடும்பத்தினர் மட்டுமே உலகப்புகழ் பெற்ற மானாமதுரை கடம் தயாரித்து வருகின்றனர். மீனாட்சி அம்மாள் அதில் சிறந்த நிபுணர்.“இத ஒரு 3000 தடவை தட்டணும்” சொல்லிக்கொண்டே செய்கிறார். அது சுடாத களிமண் பாண்டம், நம்மை போன்றவர்கள் பார்த்தால் பொங்கல் பானையாகவே தெரிகிறது. ஆனால் அதை மடியில் வைத்து, ஒரு மரத்தட்டையால் தட்டித் தட்டி, ஒரு மண்பாண்ட இசைக்கருவியாக உருமாற்றுகிறார். அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு, கர்நாடக இசைக்கச்சேரிகளில் முக்கிய இடம் வகிக்கும் உயர்தரமிக்க கடம் முழுமையடைகிறது.

தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து ஒருமணிநேர பயணத்தில் மண்பாண்டங்களுக்கு, குறிப்பாக கடத்திற்குப் புகழ் பெற்ற மானாமதுரையை அடையலாம். “எனக்கு 15 வயசு இருக்கும்போதே கல்யாணம் பண்ணி குடுத்துடாங்க. என் வீட்டுக்காரரு குடும்பம் நாலு தலைமுறையா இந்தத் தொழில் தான் செஞ்சுட்டு இருந்தாங்க.” தன் கணவர் மற்றும் மாமனாரிடம் இருந்து இந்த கைவினைத் தொழிலை மீனாட்சி அம்மாள் கற்றுக் கொண்டிருக்கிறார். “முழுசா 6 வருசம் ஆகுங்க இதுல தேறுறதுக்கு” என்கிறார் அவரின் மகன் ரமேஷ். குயவுத்தொழிலுக்குப் புதியவர்களுக்கு இன்னும் அதிக நாட்கள் தேவைப்படும்.இதில் நுணுக்கமான பகுதி என்பது மரத்தட்டையால் தட்டித் தட்டி கடத்தின் சப்த தொனியை சரி செய்வது. வலது கையால் கடத்தின் வெளிப்பகுதியைத் தட்டிக்கொண்டே, இடது கையால் உருண்டையான கல்லை உள்பக்கமாக உருட்டுகிறார். “நிழல்ல தானே காஞ்சிருக்கு. தட்டும்போது நொறுங்கிடாம, விரிசல் விட்ராம, வழவழப்பு போயிடாம பாத்து செய்யணும்” சின்ன இடைவெளி விட்டு விளக்கம் தருகிறார். 40 வருடங்களாக மண்ணைப் பிசைந்தே காய்த்துப் போய் இருக்கின்றன அவரது கைகள். தோள்பட்டையில் இருந்து நுனிவிரல் வரை வலி எப்படி இருக்கும் என்று விவரிக்கிறார். ஆனால் கூட அடுத்த ஒரே நிமிடத்தில் மரத்தட்டையையும் கல்லையும் எடுத்து தனது பணியைத் தொடர்கிறார்.புகழ்பெற்ற சங்கீத் நாடக அகாடமியின் முயற்சியில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையில் இருந்து இவர் விருது பெற்ற புகைப்படம் அவர்கள் வீட்டின் கூடத்தை அலங்கரிக்கிறது.

அருகில் மீனாட்சி அம்மாளின் கணவர் கேசவன் ஐயா அவர்களின் மாலை சூட்டப்பட்ட புகைப்படம்.ரமேஷ் தன் குடும்பத்தினரால் மறக்க முடியாத அந்த நாளை நினைவு கூர்கிறார். தனது முதல் விமான பயணத்தில் பயத்துடன் ஒருவித பூரிப்பை உணர்ந்த அவர்கள் 2014 ஏப்ரல் 11 ஆம் தேதி இராஷ்ட்ரபதி பவனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த நாளின் மாலைவேளையில் விருது பெறும் முதல் இசைக்கருவி தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் மீனாட்சி அம்மாள்.திறன்வாய்ந்த கைவினையாளராக இருப்பினும் தன் தாயின் திறனைக்கண்டு பெருமை கொள்கிறார் ரமேஷ். சங்கீத் நாடக அகாடமியின் தகவல் புத்தகத்தில் மீனாட்சி அம்மாளைப் பற்றி “உயர்தரமிக்க கடம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்த ஒரே கடம் தயாரிப்பாளர். அவர் தயாரித்த நூற்றுக்கணக்கான கடங்கள், புகழ்பெற்ற கடம் வித்வான்களுடன் உலகின் பல இடங்களுக்கு சென்றுள்ளன“ எனக் குறிப்பிட்டுள்ளதை நம்மிடம் காட்டிய அவரின் முகம் எங்கும் பூரிப்பின் சாயல்.கடம் செய்யப்பயன்படும் களிமண்ணும் பல செயல்முறைகளில் பயணப்பட வேண்டும். “5 அல்லது 6 குளங்களில் இருந்து களிமண் எடுப்போம்” விவரிக்கிறார் ரமேஷ். ஒருநாள் காய வைக்கப்படும் களிமண் வைகை ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட சன்னமான மணலுடன் கலக்கப்பட்டு சுடு வெயிலில் 4 மணிநேரம் காய வைக்கப்படும். அதனுடன் ஈயம் மற்றும் கிராஃபைட் கலக்கப்பட்டு 6 மணிநேரம் நன்றாக மிதிக்கப்பட்டு பண்படுத்தப்படுகிறது. 2 நாட்களுக்குப் பிறகு நன்றாக காய்ந்து உறுதியான மண், பானை வனைவதற்குத் தயாராகிறது.

அலட்டிக்கொள்ளாமல் அதைச் செய்கிறார் ரமேஷ். பெரிய மண்கட்டிகளை மின்சக்கரத்தின் நடுவில் வைத்து அதை சுழலச் செய்கிறார். விரைவில் அவரது கைகள் அதனை பானையாக வனைந்து முடிக்கின்றன. அடுத்த கட்டமாக தட்டித் தட்டி தொனியை சரி செய்வது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு பானை நிழலில் காயவைக்கப்பட்டு, 4 மணிநேரம் வெயிலில் சூடேற்றப்படுகிறது. இந்த நிலையில் அதன் எடை சுமார் 16 கிலோவிற்கு இருக்கும். பின் காவி நிற சாயம் பூசப்பட்டு வழவழப்பு தன்மையுடன் மாறுகிறது. பின்னர் 12 மணிநேரம் சூளையில் இடப்பட்டு தன் பாதி எடையை இழக்கிறது. இனிய இசை தரும் 8 கிலோ எடை கொண்ட மானாமதுரை கடம் தயாராகிவிட்டது.இப்போதெல்லாம் கடம் தயாரிப்பு முறை அதிகம் மாறிவிட்டது. கடம் வாசிப்பாளர்கள் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல சிறியதாக, எடை குறைவாக உள்ளதாக, நேர்த்தியாக இருப்பதையே விரும்புகிறார்கள். மானாமதுரை கடம் இன்றளவும் கனமானதாகவே செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்குப் பயன்படுத்தி வரும் மண்பாண்டகளை விட 3 மடங்கு அதிக எடையும் 2 மடங்கு அதிக தடிமனும் கொண்டது. சென்னை மற்றும் பெங்களூரில் செய்யப்படும் கடங்கள் கூட இதை விட எடை குறைவாக இலேசாகவே உள்ளன.

செய்யப்படும் உத்தியைத் தவிர்த்து, மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் மண்ணும் கூட இந்த கடத்தின் தனித்தன்மை வாய்ந்த இசைக்கு முக்கியக் காரணம். துரதிர்ஷ்டவசமாக, இந்த மண் தற்போது செங்கல் செய்ய எடுக்கப்பட்டு விடுவது கடம் தயாரிப்பாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் ரமேஷ் தன் மகள்களுக்கும், தங்கையின் பிள்ளைகளுக்கும் இந்தக் கலையை மகிழ்வுடன் கற்றுக்கொடுத்து வருகிறார். அந்த குடும்பத்தில் 5ஆம் தலைமுறையும் கடம் செய்யப் பழகி வருவது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பணத்திற்காக அல்ல. ஒரு கடம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆடம்பரமாகக் கருதப்படும் சீனக்களிமண் பாத்திரங்கள் சில ஆயிரங்கள்.தங்களது 160 வருட பாரம்பரிய கலையைக் கற்றுக் கொள்வதில் அந்தக் குடும்பத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். “எனக்கு 10 வயசு இருக்கும் போது ஒரு அமெரிக்க நிருபர் இங்கு வந்திருந்தாங்க. எங்க வருமானத்தைப் பார்த்து அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சி. எங்கள கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விடுறேன்னு சொன்னாங்க. ஆனா எங்க அப்பா வேணாம் சொல்லிடாரு. நாங்க இந்த தொழில கத்துக்கணும் தான் ஆசைப்பட்டாரு” நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ரமேஷ். இவர் தனது 90 வயது தாத்தாவிடம் இருந்து இந்த கைவினைத் தொழிலைக் கற்றுக் கொண்டிருக்கிறார். “எங்க தாத்தா அவர் சாகறதுக்கு 2 நாள் முன்னாடி வர நல்லா வேலை செஞ்சிட்டு இருந்தார். “ என்கிறார் ரமேஷ்.

கிடைக்கும் பிரதிபலன் சிறியதாக இருந்தாலும், இசைக்கு ஆற்றும் சேவையாகவே மீனாட்சி அம்மாள் இத்தொழிலை செய்து வருகிறார். பக்கவாத்தியமாகவே இருந்து வரும் கடம், தனிக்கச்சேரியாக வாசிக்கப்படுவது குறைவு தான். மீனாட்சி அம்மாள் தான் செய்த கடங்கள் பங்கேற்ற இரண்டு கச்சேரிகளுக்குச் சென்றிருக்கிறார். நம்மிடம் இதைப்பகிர்ந்து கொண்டது ரமேஷ். மீனாட்சி அம்மாள் அதிகம் பேசுவதில்லை. விருது வாங்கிய பிறகும் கூட தன்னைப் பற்றிக் கூற மிகவும் தயக்கம் காட்டியுள்ளார். அகில இந்திய வானொலிக்காக இவரைப் பேட்டி கண்டுள்ளனர். “அங்கயும் போய் எங்க அப்பாவுக்கு பிடிச்ச குழம்பு எப்படி வைக்கிறதுனு தான் பேசிட்டு வந்தாங்க “ என சொல்லி சிரிக்கிறார் ரமேஷ்.அவர்கள் வியாபாரம் பற்றி கொஞ்சம் பேசினார் மீனாட்சி அம்மாள். கடம் தவிர பிற மண்பாண்டங்களும் செய்து வருகிறார்கள். சமையலுக்குப் பயன்படுத்தி வரும் மண்பாண்டகள், சித்த மருந்துகள் வைக்கப்படும் களிமண் பாண்டங்கள் ஆகியவையே இவர்களின் அன்றாட வருமானத்திற்கு வழி செய்கின்றன. மீனாட்சி அம்மாள், ரமேஷ், அவரது மனைவி மோகனா, தங்கை பரமேஸ்வரி மற்றும் சில உதவியாளர்கள் சேர்ந்து வருடத்திற்கு 400 கடங்களை செய்கின்றனர். அதில் பாதி விற்பனைக்கு வருகின்றன. மற்றவை ஒலி மற்றும் தொனி பரிசோதனையில் தோல்வி அடைகின்றன. பார்க்க மிக நேர்த்தியாக இருப்பவை கூட இதில் நிராகரிக்கப்படுகின்றன.

இந்த தொழிலுக்கு எவ்வித பண உதவியும் இல்லை. அரசும் எவ்வித ஆதரிப்பும் தருவதில்லை. எங்களை ஊக்குவிப்பதும் இல்லை என்று தன் மனக்குறையை நம் முன் வைக்கிறார் ரமேஷ். இவ்வளவு பிரச்சினைகளிலும் தம்மால் சில குடும்பத்தினர் பிழைப்பது குறித்து அவருக்குப் பெருமையே.அவரை சந்திக்க சென்றது ஒரு மழைக்காலத்தில். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் இருந்தது. நிச்சயம் மழை வரப்போவதன் அறிகுறி. மண்பாண்டங்கள் அனைத்தும் அவர்களின் வீட்டினுள் அடுக்கப்பட்டிருந்தன. தங்களின் தொழிலுக்கு பாதகம் செய்யும் மழையிடம் இவர்களுக்கு மனத்தாங்கல் உண்டு. ரமேஷ் கடத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார். அதன் வாயின் அருகில் தட்டிட மிகத்துல்லியமான உலோக ஒலி வருகிறது. ஆனால் ரமேஷ் முறையாக கடம் பயின்றவர் அல்ல. இருப்பினும் அவரின் இசை, செவிகளுக்கு இன்பமாகவே இருந்தது.

பெரும்பாலான இசைக்கருவிகள் விலங்குகளின் தோலில் இருந்தே உருவாக்கப்படுகின்றன. ஆனால் கடம் மட்டுமே பஞ்சபூதங்களால் உருவாகிறது. பூமியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை காற்றும், ஆகாயத்தின் சூரியனும் உலர்த்தி, நீர் அதற்கு வடிவம் கொடுக்க, நெருப்பு அதனை முழுமை செய்கிறது. தங்களிடம் பணிசெய்பவர்களைப் பற்றி ரமேஷ் எதுவும் கூறவில்லை. அது அவசியமும் இல்லை. ஏனெனில் அவர்கள் வீட்டில் ஒலிப்பதெல்லாம் மீனாட்சி அம்மாள் தட்டித் தட்டி கடத்தை நேர்த்தியாக்கும் ஒலி மட்டுமே…

படங்கள்(Photo Credits): Aparna Karthikeyan
மேலும் விவரங்களுக்கு https://ruralindiaonline.org/…/when-meenakshi-beats-a-pot-…/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here