சிவகங்கை மாவட்ட பிரான்மலையை ‘சின்னக் கொடைக்கானல்’ என்கின்றனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற பாண்டிய நாட்டின் 14 ஸ்தலங்களில்பிரான்மலை முன்னால் நிற்கிறது. அரிதான மூலிகைகள் இங்கு அதிகமிருக்கின்றன. முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னன் ஆட்சியில் இப்பகுதியே பறம்பு நாட்டு தலைநகராயிருந்தது. இங்குதான் மன்னர் பாரியின் அரசவைக் கவிஞர் கபிலர் வாழ்ந்தார். இக்குறிஞ்சி நிலத்தின் மலையடிவாரத்தில் பாதாளம், பூமி, ஆகாயம் எனும் மூன்றடுக்கு குடைவரைக் கோயில் இருக்கிறது. கொடுங்குன்றீஸ்வரர், குயிலமுத நாயகி அம்மன், முருகன் சன்னதிகள் பாதாளத்தில் இருக்கின்றன. பூமி எனும் நடுப்பகுதியில் கொடூர பைரவர் சன்னதி, பாரி மன்னன் முல்லைக்குத் தேர்தந்ததைக் காட்டும் சுதை சிற்பக் காட்சிகள் உள்ளன. ஆகாய கோயிலில் மங்கை பாகர், சிவகாமி அம்மன் சன்னதிகளுடன் மகா மண்டபக் கல்தூண்களில் இருக்கும் அற்புத கலை வேலைப்பாடுகளும் அற்புதமானவை. இரண்டாயிரத்து 500 அடி உயரமிக்க இம்மலையில் பறம்பு மலை பாலமுருகன் கோயிலுடன் மத ஒற்றுமை பேசும் விதம், சேக் அப்துல்லா அவுலியா தர்காவும் இருக்கிறது. சிவகங்கைச் சீமை ஆண்ட மருதுபாண்டியரிடம் ஊமைத்துரை அடைக்கலம் பெற்றார். அவரை பிரான்மலை மலைமுகட்டில்தான் தங்க வைத்தனர். வெள்ளையர்களை எதிர்த்துப் போராட இங்கு உருவாக்கிய பெரிய இரும்பு பீரங்கியும், ஊமைத்துரை தங்கி இருந்த ‘ஊமையன் குடம்பை’ எனும் பாதாள குகையும் இன்றும் பழைய வரலாற்றை நமக்கு காட்டுகின்றன.
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில்

❂ பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை.
மூலவர் : கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்.
தாயார் : குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்.
தல விருட்சம் : உறங்காப்புளி.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண பெயர் : எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்.
தல வரலாறு :
❂ கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள் மற்றும் முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றுவிட்டனர். இந்த நிகழ்வின் காரணமாக உலகில் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்ததும் காணப்பட்டது. உலகை சமப்படுத்த சிவன் பெருமான், அகத்தியரை தென்திசையில் உள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.
❂ அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் முறையிட்டார். அதற்கு சிவபெருமான் தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார். அப்போது அகத்தியர் சிவபெருமானிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று ஆகும். இக்கோவிலில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.
தலச் சிறப்பு :
❂ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்) சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோவில் அமைந்துள்ளது.
❂ சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.
❂ மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன.
❂ மலை மேலே காரணாகம முறையிலும், கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.
❂ ‘பெயரில்லா மரம்” மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் ‘பெயரில்லா மரம்” என்றே அழைக்கின்றனர்.
மூன்றடுக்கு சிவன் கோவில் :
❂ ஒரு சமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின் போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது.
❂ இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார். பாதாளத்திலுள்ள கோவிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.