கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல் டி20. உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்து, ஏலம்விட்டு வருகிறது. இதில் யுவராஜ் சிங், ப்ராண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விலை போகவில்லை.அதேசமயம் துடிப்பான இளம் வீரர்களுக்கு கடும் பேரம் நடக்கிறது. இதில் இந்திய பந்துவீச்சாளர் உனாட்கட் 8.4 கோடிக்கு விற்பனையாகியிருந்தார். இதுவே இன்றைய ஏலத்தில் அதிக விலையாக இருந்தது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மேயர் 4.2 கோடிக்கு விலை போனார். இதேபோன்று பல்வேறு வீரர்களும் ஏலத்தில் பரப்பாக விற்பனையாக யாரும் எதிர்பாராத விதமாக தமிழகத்தை சேர்ந்த வீரரான வருண் சக்கரவர்த்தி வினோத் ஏலத்தில் அதிக பேரத்திற்கு கேட்கப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ரூ.20 லட்சத்திற்கு தொடங்கிய அவரது ஏலம் ரூ.8.4 கோடியில் முடிந்தது. இன்றைய ஏலத்தில் உனாட்கட் அதிக விலைக்கு விற்கப்பட்டிருந்த நிலையில், அவரை வருண் சமன் செய்தார்.
தமிழகத்தை சேர்ந்தவர் வருண் சக்கரவர்த்தி. 13 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது 17 வயது வரையிலும், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் விளையாடினார். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படித்தார். 5 வருட படிப்பை முடித்த அவர், அதன்பின்னர் கட்டுமானப் பணி ஃப்ரீலான்ஸ்சராக பணியாற்றிக்கொண்டே, டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, க்ரோம்பெஸ்ட் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து பந்துவீச்சாளராகவும், ஆல்ரவுண்டாகவும் விளையாடினார்.வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவர், தனது இரண்டாவது போட்டியில் முழங்காலில் காயம் ஏற்பட்டு சுழற்பந்து வீச்சாளரானார். பின்னர் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே மாற்றிக்கொண்டார். காயத்திற்குப் பிறகு திரும்பிய அவர் ஜூப்ளி கிரிக்கெட் கிளப்பில் சென்னை அளவிலான தொடரில் விளையாடினார். அப்போது 7 போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.
இதைத்தொடர்ந்து டின்.என்.பி.எல் என்ற பெரிய தளம் இவருக்கு கிடைத்தது. மதுரை அணிக்காக அவர் விளையாடினார். ஒரு முறை திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு 11 ரன்களை கொடுத்திருந்தனர். ஆனால் வருண் மட்டும் ஒரு ஓருவருக்கு வெறும் 6 ரன்களை மட்டும் கொடுத்து திண்டுக்கல் அணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து மதுரை அணி சென்னைக்கு எதிராக வெற்றி பெற்றபோது, வருண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதைத்தொடர்ந்து ராஞ்சி தொடர் மூலம் தமிழக அணி பங்கேற்ற வருண், மும்பைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோன்று ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஜம்மூ காஷ்மீர் ஆகிய அணிகளுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்தச் சூழலில் ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் வருண் இடம்பெற்றார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு தொடங்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, கிரிக்கெட் உலகின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியுள்ளது.