இளையான்குடி பகுதியில் வறட்சியில் வதங்கிய வெள்ளைபூசணி!

0
652
தாயமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்ட வெள்ளை பூசணிகள்

இளையான்குடி பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால், வெள்ளை பூசணிக்காய்கள் வளர்ச்சி இல்லாமல், காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இளையான்குடி பகுதியில் பெய்ய வேண்டிய பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால், கடும் வறட்சி ஏற்பட்டது. அதனால் 15 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் முற்றிலும் அழிந்தது. எனவே குறைந்த காலத்தில் மகசூல் பெறலாம் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் காய்கறி பயிரிட ஆர்வம் காட்டிவந்தனர். இளையான்குடி அருகே திருவள்ளூர், தாயமங்கலம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளை பூசணிகள் பயிரிடப்பட்டன. ஆனால் மழை பெய்யாமல் கடும் பனி மற்றும் வெயில் வாட்டி வதைத்ததால், பூசணி செடிகள் வளர்ச்சி அடையாமல், காய்ந்து கருகி வருகின்றன.

ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோதும், போதிய வளர்ச்சி இல்லாமல், பூசணிக்காய்கள் அனைத்தும் வெதும்பி உள்ளன. மகசூல் பெருமளவு குறைந்ததால், விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘கேரளா மற்றும் ஆந்திராவிற்கு சித்த மருத்துவம், அல்வா உள்ளிட்ட உணவு வகைகளில் சேர்ப்பதற்காக இந்த வெள்ளை பூசணிக்காய்களை அதிகளவில் வாங்கிச் செல்வர். தற்போது இளையான்குடி பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், பூசணி மகசூல் கடுமையாக பாதிப்படைதுள்ளது. எனவே பாதிப்படைந்த பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி: தினகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here