இயற்கை விவசாயத்தில் அசத்தும் காரைக்குடியை சேர்ந்த மெக்கானிக் பொறியாளர்!

0
2336

மலைப்பிரதேசங்களில் மட்டும் பயிரிப்படும் திராட்சை பயிரை, இயற்கை விவசாய முறையில் காரைக்குடியில் பயிரிட்டு அசத்தி வருகிறார் மெக்கானிக் பொறியாளர்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் விடுதலை. மெக்கானிக் பொறியாளரான இவர், கட்டுமான துறையில் கால்பதித்து கட்டிடங்களை கட்டி விற்பனை செய்து வருகிறார். ஓ.சிறுவயல் பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் திராட்சை பயிரிட்டு மகசூல் பார்த்து வருகிறார்.இது குறித்து விடுதலை கூறுகையில், ‘‘எங்களுக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை 85 சென்டாக 3 பிரிவாக பிரித்து வைத்து திராட்சை பயிரிட்டுள்ளோம். திராட்சைக்கு பொதுவாக தண்ணீர் அவ்வளவாக தேவையில்லை. தவிர இப்பகுதி செம்மண்ணில் தண்ணீர் தங்காது.சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டை பகுதியில் திராட்சை பயிரிடுவதாக கேள்விப்பட்டு, கடந்த 2016ல் எங்களது வீட்டு தேவைக்காக தேனியில் இருந்து சோதனை முறையில் திராட்சை செடி வாங்கி நட்டு வளர்த்தோம். நல்ல முறையில் வளர்ந்ததால் 2.25 ஏக்கரிலும் பயிரிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் ஐந்து டன்னுக்கு மேல் மகசூல் எடுத்துள்ளோம். இதனை தோட்டத்தின் அருகேயே நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். கடலை புண்ணாக்கு, மாட்டு, ஆட்டு எரு தான் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிகளுக்கு பஞ்சகாவ்யம் தெளிக்கிறோம். ஒரு ஏக்கருக்கு கல்லுகால், பந்தல், மண் பக்குவப்படுத்தல், வாய்க்கல் அமைத்தல் என 3 லட்சம் வரை செலவு வரும். இது 10 ஆண்டுகளுக்கு பலன் தரும். வருடத்துக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.

மழை காலத்தில் விலை குறையும் என்பதால் நாங்கள் 2 முறை அறுவடை செய்கிறோம். ஏக்கருக்கு 4 டன் வரை மகசூல் எடுக்கலாம். பூ பூக்கும் போது மழை இருக்க கூடாது. இதற்கு மாவு பூச்சி தாக்குதல் வரும். ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை லாபம் பார்க்கலாம். பூச்சிகளை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யம், மொட்டாக இருக்கும் போது இளநீர் தெளித்து வருகிறோம். 3 மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்யவேண்டும். 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். முற்றிலும் இயற்கை விவசாயத்திலேயே செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். செம்மண் என்பதால் பழங்களும் நன்றாக இருக்கும். முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்’’ என்றார்.விடுதலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here