சிவகங்கை வரலாற்று சிறப்பு மிக்க இடைக்காட்டூர் தேவாலயம் அதன் தோற்றத்திலே தனித்துவமானதாக இருக்கும். பிரான்சில் உள்ள ரெய்ம்ஸ் கதீட்ரல் சர்ச்சை மாதிரியாக கொண்டு 110 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் உள்ள சிலைகள் பிரான்சில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.கிறிஸ்துவ தேவாலயங்களைப் பொறுத்தவரை, ஆண்டவர் இயேசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் இயேசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், மூன்றாவது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.
ஆயிரம் பேர்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்யக்கூடிய சபையாகசிற்பங்களும் ஒவியங்களும் கோவில்களில் மட்டுமில்லை. தேவாலயங்களிலும் நிறைந்து காணப்படவே செய்கின்றன. பிரான்சில் உள்ள தேவாலயங்களில் உள்ள கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாதது இடைக்காட்டூர் தேவாலய ஒவியங்கள். பிரார்த்தனைக்கு மட்டுமே செல்லாமல் ஒரு நாள் ஒதுக்கி ஒவ்வொரு சுவரிலும் ஒவ்வொரு கண்ணாடியிலும் தீட்டப்பட்ட ஒவியங்களை, சிற்பங்களை நுணுக்கமாக நின்று நிதானித்து காணும் போது தான் காலம் கடந்து நிற்கும் அதன் சிறப்பும் தனித்துவமும் புரியும். விருப்பமிருந்தால் சென்று பாருங்கள்.
மதுரையிலிருந்து 36 கி.மீ தொலைவில் ராமநாதபுரம் செல்லும் வழியில் இந்த சர்ச் அமைந்துள்ளது.